×

தெருவில் தேங்கி நிற்கும் சாக்கடை பாலையம்பட்டியில் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை

அருப்புக்கோட்டை, மார்ச் 18: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாலையம்பட்டி கிராம ஊராட்சி. இதில் உள்ளது கிழக்குத்தெரு. இதில் 16 தெருக்கள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. தெருக்களில் வாறுகால் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதி முழுவதும் வாறுகால்கள் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் தெருக்களின் நடுவே பள்ளம் தோண்டி வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை விடுகின்றனர். இதனாலும் சுகாதாரக்கேடாக உள்ளது. மேலும் இதில் கொசு உற்பத்தியாகி இரவில் மட்டுமல்லாது பகலிலும் கடித்து தொற்றுநோய்கள் ஏற்படுத்துகிறது.

இங்குள்ள தெருக்களில் ரோடு அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியுள்ள நிலையில் ரோடு சேதமடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. மழை காலங்களில் சேறும் சகதியுமாக கிடப்பதால் நடந்து செல்ல முடியவில்லை. தாமிரபரணி குடிநீர், வைகை குடிநீர் இருந்தும் இந்த பகுதிக்கு முறையாக வழங்குவதில்லை. தாமிரபரணி குடிநீரும் 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. குடிநீர் மேல்நிலைத்தொட்டி மூலம் வைகை குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் மேல்நிலைத்தொட்டி முன்பு உள்ள குழாயில் தண்ணீர் வருவதில்லை.

மேலும் இப்பகுதியில் உள்ள செவல் கண்மாயில் கழிவுநீர் மட்டுமே நிரம்பி உள்ளது. பழைய பாலையம்பட்டியின் மொத்த கழிவுநீரும் செவல் கண்மாயில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து ஏற்படும் துர்நாற்றத்தால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கண்மாயில் மழைநீர் மட்டும் தேங்கி இருக்கும்போது குளிப்பதற்கும், துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த பகுதியில் கழிப்பறை வசதி இல்லை. பட்டத்தரசியம்மன் கோவில் பின்புறம் 5 லட்சம் செலவில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் சுகாதார வளாகம் அருகிலேயே திறந்தவெளியில் கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரக்கேடாக உள்ளது.

எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பாலையம்பட்டி கிழக்குத்தெரு பகுதிக்கு குடிநீர் வசதி, வாறுகால் வசதி, சாலை வசதி, செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வளர்மதி கூறுகையில், தெருக்களில் வாறுகால் முறையாக தூர்வாரப்படவில்லை. சாக்கடை தேங்கி துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக்கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனால் காய்ச்சல் பரவுகிறது. வாரம் ஒருமுறையாவது வாறுகாலை தூர்வாரி கழிவுநீரை வெளியேறச்செய்ய வேண்டும் என்றார். முருகன் கூறுகையில், செவல் கண்மாயில் தான் கிராமத்தின் கழிவுகள் அனைத்து சேருகிறது. மழை பெய்து கண்மாய் நிறைந்தாலும் பலன் இல்லை. பாசிபடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. கிராமத்திற்கு உபயோகமாக இருந்த கண்மாய் தற்போது புழக்கத்திற்கு கூட பயன்படாத நிலையில் உள்ளது. கண்மாயில் கழிவுகளை வராமல் தடுத்து மீண்டும் கண்மாயினை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார்.

Tags : street ,
× RELATED நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து...