×

எதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் கார்களில் கண்களை கூச செய்யும் விளக்கு போக்குவரத்து போலீசார் கவனிப்பார்களா?


ராஜபாளையம், மார்ச் 18: ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கனரக வாகனங்கள் மற்றும் சொகுசு கார்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி உமிழும் விளக்குகளால், எதிரில் வரும் டூவீலர்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகன சோதனைகளில் ஈடுபடும் போலீசார் இதனையும் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. போக்குவரத்து விதிமீறல்களில் ஒன்றான வாகன முகப்பில் ஒளி அதிகம் ஒளிரும் விளக்குகளால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்படைகின்றனர். ராஜபாளையத்தில் ஹெல்மெட்டுக்கு தரும் முக்கியத்துவம் பிற விதிமுறைகளுக்கு அளிக்கப்படுவதில்லை. குறிப்பாக அதிக ஒலி எழுப்பியும், அதிக ஒளியை வெளியிட்டும் செல்லும் கனரக வாகனங்களால் பிற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இந்த விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பொதுமக்களிடையே இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், இதனை ஒரு விதிமீறலாக யாரும் கருதுவதில்லை.

தற்போது புதிதாக வரும் டூவீலர்களில், எஞ்சின் ஸ்டார்ட் செய்தவுடன் எல்.இ.டி முகப்பு விளக்கு எரியும் வகையில் உள்ளது. இவை பகலிலேயே கண்களை கூச செய்கிறது. இந்த நிலையில் சில டூவீலர்களில் மற்றவர்களிடம் வித்தியாசம் காட்டுவதற்காக வாகனத்தை சுற்றிலும் எல்.இ.டி விளக்கு பொருத்தி வருகின்றனர். இவற்றின் மேல் ஒளியை கட்டுப்படுத்த கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறை முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக விளக்குகள் பொருத்துவது குறித்து போக்குவரத்து போலீசாரோ அல்லது வட்டார போக்குவரத்து அலுவலர்களோ கண்டுகொள்வதில்லை. அதன் விளைவாக ஆட்டோ, சிறிய ரக சரக்கு வாகனம் போன்றவற்றிலும் அதிக ஒளி வீசும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படுகின்றன.

இதனால் எதிரே வரும் எக்செல், ஸ்கூட்டி மற்றும் குறைந்த வெளிச்சதை வெளியிடும் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு கூச்சத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கண்ணாடி அணிந்து செல்லும் பார்வைத் திறன் குறைபாடுடையவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். சொகுசு பஸ், தனியார் பஸ்கள், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் அதிகமான விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இவற்றில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணி, சாலை பாதுகாப்பு வார விழாவுடன் முடிந்து விடுகிறது. இதுபோன்ற விதிமீறல்களை தடுப்பதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்