×

20 வினாடிகள் கைகளை தேய்த்து கழுவ வேண்டும் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுறுத்தல்

தோகைமலை மார்ச் 18: கரூர் மாவட்டம் தோகைமலை காவல்நிலையத்தில் கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி இன்ஸ்பெக்டர் முகமதுஇத்ரீஸ் தலைமையில் நடைபெற்றது. சப்இன்ஸ்பெக்டர் ராமசாமி முன்னிலை வகித்தார். தோகைமலை சுகாதார ஆய்வாளர் பொன்னுச்சாமி கலந்து கொண்டு கொரோனா வைரஸ் குறித்து செய்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு அளித்தார். அப்போது கொரானா வைரஸ் மனிதனின் சுவாச பாதையை தாக்குவதால் எளிதாக மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனை தாக்குகிறது. கொரானா வைரஸ் தாக்கியவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, வரட்டு இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்படுகிறது.

இதற்கு அடுத்தகட்டமாக கடுமையான உடல் வலி ஏற்பட்டு நிமோனியா வந்து கிட்னி செயல் இழக்கிறது. இறுதியில் திடீர் மரணம் ஏற்படுகிறது. மனிதனின் சுவாச பாதையை தாக்குவதால் வைரஸ் பாதித்த நபரின் இருமல், தும்மல் மூலம் எளிமையாக பரவுகிறது. மேலும் வைரஸ் பாதித்த நபர் பயன்படுத்திய பொருட்களை தொடுவது மூலமும் பரவுகிறது. கொரானா வைரஸ் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதால் வைரஸ் தாக்கிய நபரை தொடாமல் இருப்பதன் மூலம் வைரஸ் நமக்கு பரவாமல் பார்த்து கொள்ளலாம். கொரானா வைரஸ் தாக்குவதில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள வைரஸ் தாக்கிய நபரிடம் இருந்து நாம் தள்ளி இருக்க வேண்டும். குறைந்தது 20 வினாடிகளுக்கு கையை நன்றாக தேய்த்து கழுவுதல் வேண்டும். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்களோடு பணியாற்றும் நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

ஆகவே காவல்நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் அலுவலகத்திற்கு உள்ளே வரும்போதும், வெளியில் செல்லும்போதும் சோப்பு போட்டு நன்றாக கையை தேய்த்து கழுவுதல் வேண்டும். அதேபோல் காவல்நிலையத்திற்கு புகார்மனு அளிக்க வரும் நபர்களையும் நன்றாக கையை தேய்த்து கழுவிய பின்பு உள்ளே அனுமதிக்க வேண்டும். இதற்காக கை கழுவும் இடத்தை தனியாக அமைத்தல் வேண்டும். புகார் மனுக்களின் விசாரனையின்போதும் குறிபிட்ட (1மீட்டர்) இடைவெளி வேண்டும். மற்றவர் இருமினாலும் தும்மினாலும் அல்லது நாம் இருமினாலும் தும்மினாலும் வாய் மற்றும் மூக்கு பகுதியை கையை வைத்து மறைக்க வேண்டும். எச்சிலை கண்ட இடத்தில் துப்புதல் கூடாது. ஐகதி அறையில் அடிக்கடி கிருமி நாசி தெளித்தல் வேண்டும். மேலும் வாகனங்கள் வெளியில் செல்லும் போதும் உள்ளே வரும்போதும் வாகனங்களுக்கு கிருமி நாசி தெளிக்க வேண்டும். இதில் சந்தேகங்கள் இருப்பின் அரசு மருத்துவ மனையை அனுக வேண்டும். இந்த தகவல்கள் குறித்து காவல்நிலையத்தில் விழிப்புணர்வு பலகை வைத்தல் அவசியமாகும் என்று செய்முறை விளக்கத்துடன் ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காவலர்கள் புகார்தாரர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Corona Awareness Seminar ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு