×

தேனி மாவட்ட காவல்நிலையங்களில் சுகாதாரத்தை பராமரிக்க எஸ்பி உத்தரவு மாஸ்க், சோப் திரவத்துக்கு தட்டுப்பாடு

தேனி, மார்ச் 18: கொரோனா தற்காப்பு நடவடிக்கையாக, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். ஆனால், மாவட்டத்தில் சோப் திரவம் மற்றும் மாஸ்க்குக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இதன் பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சீனா, ஜப்பான், இத்தாலி நாடுகளை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கேரள மாநிலத்தின் அண்டைய மாவட்டங்களான தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் எச்சரிக்கை நடவடிக்கையை தமிழக சுகாதாரத் துறை முடுக்கி விட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. சினிமா திரையரங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தேனி மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி மாவட்டத்தில் உள்ள 32 காவல்நிலையங்களிலும் சுகாதாரத்தை பராமரிக்க உத்தர்விட்டுள்ளார். இதில், ‘அனைத்து காவல்நிலையங்களிலும் உள்ளே நுழைவதற்கு முன்பாக நன்கு கை, கால்களை கழுவி வருவதற்கு தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும். நாசினி கிருமியை போக்கக் கூடிய பாக்டிரியல் சோப் திரவம் வைக்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் அணிந்து அமர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், மாவட்டத்தில் ஆல்கஹால் கலந்த ஆண்டி பாக்டீரியல் சோப் திரவ பாட்டில் மருந்துக்கடைகளில் பெரும் தட்டுப்பாடாக உள்ளது. இதேபோல காவல் நிலையங்களில் போலீசார் மாஸ்க் அணிந்து கொள்ள மருந்துக்கடைகளில் மாஸ்க்கும் தட்டுப்பாடாக உள்ளது. எனவே, எஸ்பி சாய்சரண்தேஜஸ்வி, அரசினர் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் கிருமிநாசினி சோப் திரவம் வழங்கும்படி கேட்டுள்ளார். இதேபோல தேனி மாவட்டத்தில் கேரள எல்லைகளாக உள்ள போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய மூன்று இடங்களில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இம்மூன்று சோதனை சாவடிகளிலும் கொரோனா வைரஸ் சோதனை செய்ய ஒரு டாக்டர் தலைமையில் 2 சுகாதார ஆய்வாளர்கள், 2 கிராம சுகாதார செவிலியர், 2 பல்நோக்கு பணியளர்கள், 2 துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சுத்தப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags : SP ,police stations ,Theni district ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...