×

தேனி அருகே வீரபாண்டியில் நீர்வரத்தின்றி அசுத்தமான முல்லையாறு பக்தர்கள் குளிக்க தடைவிதிக்கப்படுமா?

தேனி, மார்ச். 18: தேனி அருகே வீரபாண்டி முல்லையாற்றில் நீர்வரத்து இல்லாததால் ஆறு மாசுபடிந்துள்ளதால், கொரோனா பாதிப்பு அச்சுறுத்தி வரும் நிலையில், மாசு படிந்த ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி அருகே, வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது.  இக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தினசரி வந்து செல்கின்றனர். கேரளாவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளில் பலரும் இக்கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

இச்சிறப்பு வாய்ந்த கோயில் அருகே, முல்லைப்பெரியாறு செல்கிறது. பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அப்போது கவுமாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடி விட்டு அம்மனை தரிசிப்பது வழக்கம். தற்போது முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் வீரபாண்டி முல்லையாற்றின் தடுப்பணை காய்ந்து போயுள்ளது. தடுப்பணைக்கு கீழ் பகுதியில் தண்ணீர் பல நாட்களாக தேங்கி அசுத்தமடைந்துள்ளது. இதில், பக்தர்களால் வீசபட்ட கழிவுப்பொருள்கள் மிதக்கின்றன. கொரோனா அச்சம் நிலவி வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் செல்ல தடை உள்ளது. எனவே, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அசுத்தமடைந்து தேங்கியுள்ள நீரில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Veerapandi ,Theni ,
× RELATED திருவாடானையில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி