×

கடமலைக்குண்டு அருகே 45 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாத பாலூத்து கிராமம் பள்ளிக்கு 5 கி.மீ நடந்து செல்லும் மாணவர்கள்

வருசநாடு, மார்ச் 18: கடமலைக்குண்டு அருகே உள்ள பாலூத்து கிராமத்திற்கு கடந்த 45 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பள்ளிக்கு மாணவ, மாணவியர் தினசரி 5 கி.மீ நடந்து செல்லும் அவலம் உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலைக்குண்டு அருகே பாலூத்து ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்திற்கு கடந்த 45 ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் கடமலைக்குண்டு அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினசரி 5 கி.மீ தூரம் நடந்து சென்று பாடம் படிக்கின்றனர். முதியவர்கள், குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு என்றால், கடமலைக்குண்டு கிராமத்திற்கு செல்ல வேண்டும்.

இந்த சமயங்களில் போக்குவரத்துக்கு பஸ் வசதியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். கிராம மக்கள் தினசரி கடமலைக்குண்டுவுக்கு நடந்து செல்லும் அவலம் உள்ளது. கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து ஏற்படுத்தக்கோரி, பலமுறை போராட்டம் நடத்தியும் பயனில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். இது குறித்து பாலூத்தைச் சேர்ந்த அருள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் முருங்கை, அவரை, மிளகாய், தென்னை, வாழை விவசாயம் நடக்கிறது. கிராமத்திற்கு நல்ல தார்ச்சாலை வசதியிருந்தும் பஸ் வசதியில்லை. இது தொடர்பாக பலமுறை அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், விளை பொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு செல்லவும், அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்லவும் அவதிப்படுகிறோம். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Kadamalai kundu ,
× RELATED கடமலைக்குண்டு அருகே குண்டும்,...