×

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை எதிரொலி சொந்த ஊர்களுக்கு செல்லும் தொழிலாளர்கள்: ரயில் நிலையங்களில் குவியும் பயணிகள்

திருவள்ளூர், மார்ச் 18: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கும், பல தொழில் நிறுவனங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டள்ளது. இந்தநிலையில், திருவள்ளூரில் பணிபுரிந்துவந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்குபுறப்பட்டனர். இதனால், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நேற்று வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. சீனாவை முதன்  முதலாக கொரோனா வைரஸ் தாக்கியது. இந்த தாக்குதலுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டி படைத்து வருகிறது. தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வருகிற 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் ஐ.டி. கம்பெனிகளும்  தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறும், பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. திருவள்ளூர் உட்பட எல்லையோர மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் (மால்)  வருகிற 31ம் தேதி வரை மூடப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் இயல்பாக கூடும் பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது. மேலும், பணி நிமித்தமாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தங்கி இருந்த  தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனால், நேற்று காலை முதலே திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி  உட்பட பல ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது. ரயில் நிலையங்களில் சொந்த ஊருக்கு செல்ல காத்திருந்த பயணிகளும் முக கவசம் அணிந்தபடி இருந்தனர்.

Tags : Holidays ,school ,
× RELATED ஐஐடி நுழைவு தேர்வு 2வது சீசனில்...