×

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பாடு இழந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: தவிக்கும் மக்கள்

ஆவடி, மார்ச் 18: ஆவடி மாநகராட்சி அலுவலகத்தின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதாகியதால் பொதுமக்கள், ஊழியர்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனூர், கோயில்பதாகை, பட்டாபிராம், மிட்டனமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதி மக்களுக்கு மாநகராட்சி அலுவலகம் ஆவடி, புதிய ராணுவ சாலையில் செயல்பட்டு வருகிறது. தற்போது, உள்ளாட்சி அமைப்பு இல்லாததால் பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்து தகவல் தெரிவிக்க மாநகராட்சி அலுவலகம் வர வேண்டும். மேலும், பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வீட்டு வரி கட்டுதல், புதிய வரிக்கு விண்ணப்பம் செய்தல், வீட்டு மனைக்கு அங்கீகாரம் பெறுதல்  உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மாநகராட்சி அலுவலகம் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு தினமும் மாநகராட்சி அலுவலகத்திற்கு தினமும் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மேலும், இந்த அலுவலகத்தில் 80க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மேலும், வேலை முடிந்து துப்புரவு பணியாளர்களும் அலுவலகத்திற்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வந்து செல்லும் பொதுமக்கள், ஊழியர்களின் தாகத்தை தணிக்கும் வகையில், அலுவலகத்தின் வரண்டாவில் குளிர்சாதன வசதியுடன் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த சில மாதங்களாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்த கிடக்கிறது. இதனை அடுத்து, அதிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அலுவலத்திற்கு பல்வேறு வேலை நிமித்தமாக வரும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவடி மாநகராட்சி அலுவலத்திற்கு வரும் மக்களுக்கு குடிக்க அலுவலகத்தில்  தண்ணீர்  இல்லை. இங்குள்ள சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் நிலையம் பழுதாகி கிடக்கிறது. இதனால் குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் வேண்டுமென்றால் புதிய ராணுவ சாலையை கடந்து கடைகளுக்கு செல்ல வேண்டியது உள்ளது. மேலும், அலுவலக ஊழியர்களும் தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும் அலுவலகத்திலேயே குடிநீர் இல்லாதது பொதுமக்கள், ஊழியர்கள் மத்தியில் பெரும் குறையாக உள்ளது. ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பழுதை நீக்கி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Drinking water purification plant ,Awadhi Corporation ,
× RELATED ஆவடி மாநகராட்சியில் 4 பேர் பலி