×

கொரோனா பாதிப்பு எதிரொலி காய்ச்சல், இருமல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனை செல்ல வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

சிவகங்கை, மார்ச் 18:  காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை செல்ல வேண்டும் என கலெக்டர் பேசினார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் பேரிடர் காலங்களில் எவ்வாறு தற்காப்பாக இருந்திட வேண்டும் என்பதற்கான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியதாவது: தற்போது உலக நாடுகளை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு இருப்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகளின் மூலம் பொது சுகாதாரத்துறையின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவற்றை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அருகாமையில் வசிப்பவர்கள் யாருக்கேனும் இதே அறிகுறிகள் இருந்தாலும் அவர்களை மருத்துவமனைக்கு செல்ல வலியுறுத்த வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு சிலரிடம்   இருப்பதாக  அறியப்படுகிறது.

அதுபோன்ற நபர்களைக் கண்டறிந்து மருத்துவத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்குவதற்கான அனைத்து வசதிகளுடன் மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
ஒவ்வொரு முறை வெளியில் சென்று வந்தவுடன் கைகளை சோப் ஆயில் மூலம் கழுவ வேண்டும். இவ்வாறு பேசினார். மாவட்ட தீயணைப்புத்துறையின் மூலம் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பாதுகாப்பு ஒத்திகை, முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சத்தியக்குமார், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் யசோதாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமபிரதீபன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Government Hospital ,
× RELATED சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த நபர் காய்ச்சலால் உயிரிழப்பு