×

அகழாய்வுக்கு நிலம் கொடுத்தும் கண்டுகொள்ளப்படாத கீழடி விவசாயிகள் ஆழ்துளை கிணறு, இலவச மின்சாரத்திற்கு அலைய விடும் மாவட்ட நிர்வாகம்

திருப்புவனம், மார்ச் 18 : கீழடி அகழாய்வு பணிகளுக்கு நிலம் தந்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கீழடியில் இதுவரை ஐந்து கட்ட அகழாய்வு முடிந்து 6ம் கட்ட அகழாய்வுகள் நடந்து வருகின்றன. 6ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகின்றன. கீழடி அகழாய்வு பணிகள் பலவும் தென்னந்தோப்புகளின் நடுவேதான் நடந்து வருகின்றன. தென்னை மரங்களுக்கு நடுவே குழிகள் தோண்டி அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. நீதியம்மாள், மாரியம்மாள், கதிரேசன் ஆகியோரது நிலங்களில் கீழடியிலும், கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்திலும் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

இதுவரை கீழடி அகழாய்வு பணிகளுக்கு ஏராளமான விவசாயிகள் நிலம் வழங்கியுள்ளனர். கீழடி அகழாய்வு பணிகளுக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் பலரும் மாவட்ட நிர்வாகத்திடம் ஆழ்துளை கிணறு அமைக்கவும், பாசன தேவைகளுக்கு இலவச மின் இணைப்பு வேண்டியும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயி கதிரேசன் கூறுகையில், எங்கள் குடும்பத்தினருக்குச் சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவிலான தென்னந்தோப்புகளின் நடுவே தான் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்களின் நடுவே அகழாய்வு பணிகள் நடக்கிறது. தற்போதுள்ள திறந்த வெளி கிணற்றில் போதிய நீர் ஊற்றுகள் இல்லை. கூடுதல் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டுமானால் 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாக வாய்ப்புள்ளது. நிலத்தடி நீர்மட்டம் 250 அடிக்கு கீழே போய்விட்டது. தென்னை மரங்களுக்கு தினசரி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தற்போதுள்ள கிணற்றில் நீர் ஊற்று இல்லாததால் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி தென்னை மரங்களை காப்பாற்றி வருகிறோம்.

நல்ல நீரோட்டமுள்ள இடத்தை தேர்வு செய்து அங்கு ஆழ்துளை கிணறு அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அகழாய்வு பணிகளுக்காக நிலம் வழங்கிய நாங்கள் அரசிடம் இருந்து ஆழ்துளை கிணறு அமைக்க மட்டுமே நிதி உதவி கேட்டு வருகிறோம். தற்போது அகழாய்வு பணிகளுக்கும் தண்ணீர் தேவை, அகழாய்வில் எடுக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யவும், அகழாய்வு பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் தண்ணீர் தேவை. அதற்கு கூடுதல் ஆழ்துளை கிணறு அமைத்தால்தான் முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு கூடுதல் ஆழ்துளை கிணறு அமைக்க உதவ வேண்டும் என்றார்.

Tags : district administration ,land ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்