×

அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு முகத்திற்கான மாஸ்க் வழங்கப்படுமா? எளிதில் நோய் தொற்ற வாய்ப்பு

சிவகங்கை, மார்ச் 18: கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கு முகத்திற்கான மாஸ்க் இல்லாமல் அச்சத்தில் உள்ளனர். சிவகங்கையில் கடந்த 2011ம் ஆண்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பதில் புதிய மருத்துவமனையும், 2012ல் மருத்துவக்கல்லூரியும் இயங்கத்தொடங்கியது. இங்கு தினந்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இங்கு 300 மருத்துவர்கள், 300 ஸ்டாப் நர்சுகள், 300 லேப் டெக்னீசியன் மாணவர்கள், மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சிப்ட் அடிப்படையில் பணியாற்றும் இவர்கள் சிகிச்சை பெறுபவர்களின் அருகிலேயே பல மணி நேரம் இருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்சுகள், சிகிச்சை பெறுபவர்களை பல்வேறு சோதனைகளுக்கு அழைத்துச் செல்லும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என எளிதில் நோய் தொற்று ஏற்படும் நிலையில் உள்ளவர்களுக்கு கூட முகத்திற்கான மாஸ்க் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முகத்திற்கான மாஸ்க் இல்லாமலேயே அனைவரும் பணிபுரிந்து வருகின்றனர். சிலர் மட்டும் தங்களது சொந்த செலவில் மாஸ்க் வாங்கி அணிந்துள்ளனர். இதனால் இங்கு பணிபுரிபவர்கள் அச்சத்துடன் உள்ளனர். ஊழியர்கள் கூறியதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை என அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்களும் மக்கள் கூட்டமின்றி பெயரளவிலேயே இயங்கி வருகின்றன.

ஆனால் மருத்துவமனைகள் எப்போதும் போல் செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் உள்பட யாரும் விடுமுறை கூட எடுப்பதில்லை. ஆனால் எங்களின் குறைந்தபட்ச பாதுகாப்பிற்கு கூட நடவடிக்கை இல்லை. பல்வேறு தரப்பினர், அரசு அலுவலர்கள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாஸ்க் அணிகின்றனர். மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு இதுவரை மாஸ்க் வழங்கப்படவில்லை. ஒரு மாஸ்க் வெளி மார்க்கெட்டில் ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாஸ்க் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே அணியலாம். இதனால் தொடர்ந்து விலை கொடுத்து வாங்கி அணிய முடியாது. எனவே அரசு சார்பில் உடனடியாக மாஸ்க் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : government hospital employees ,
× RELATED அரசு மருத்துவமனை, ஊழியர்களை பாதுகாக்க...