×

காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் பால்குட திருவிழா

காரைக்குடி, மார்ச் 18:  காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி பங்குனி விழாவை முன்னிட்டு இன்று பல லட்சம் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் நாளில் லலிதா என்ற பெயருடன் சிறுமியாக மீனாட்சிபுரத்திற்கு வந்த அன்னையின் திருமேனி முழுவதும் அம்மை படர்ந்திருந்தது. தனியாக வந்த சிறுமிக்கு பணிவிடை செய்தவர் தான்தோன்றி பெருமான். சிறுமி வாயில் வந்த வார்த்தைகள் எல்லாம் அருள்வாக்காக வெளிவந்து பல அற்புதங்களை நிகழ்த்தியது. சிறுமியின் அற்புத செயலை கண்டு அனைவரும் வணங்கினர்.

சில நாட்களில் சிறியம்மை பெரியம்மையாக உடலெல்லாம் முத்தாய் முளைத்தது. சிறுமி படுத்த படுக்கையானார். சிலபேர் சிறுமியை கிண்டல் செய்தனர். இருந்தாலும் சிறுமி தனது அருள் வாக்கால் மற்றவர்களை ஆனந்தப்படுத்துவதை நிறுத்தவில்லை. தன்னை ஏளனம் செய்தவர் ஒருவரை அழைத்து உன்வீட்டு தோட்டத்தில் ஒரு சிறு கிணறு உள்ளதா என கேட்டார். அதன் அருகில் ஒரு தக்காளி செடி உள்ளது. அங்கு நீ சென்று அதில் உள்ள தக்காளியை பறித்து வந்து எனக்கு தா என கூறி உள்ளார். அங்கு சென்று பார்த்தபோது தக்காளி செடியும் அதில் பழமும் இருந்துள்ளது.
இதனை கண்டு வியந்த அந்த நபர் சிறுமியின் சக்தியை உணர்ந்துள்ளார். அந்த பழத்தை பறித்து சிறுமியிடம் கொடுத்துள்ளார். அது நாள் முதல் அம்மனுக்கு தக்காளி பழத்தை காணிக்கையாக பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர். ஒரு நாள் இச்சிறுமி  தன்னை சுற்றி இருந்த பக்தர்களிடம் நான் அம்மனாக மாறி அனைவருக்கும் அருள் பாலிக்கப் போகிறேன். எனவே எனது மறைவுக்கு பிறகு இந்த இடத்தில் ஆலயம் அமைக்க வேண்டும் என கூறி மறைந்தார்.

இதன்பின் 17.11.1956ம் ஆண்டு அன்னை முத்துமாரியம்மனுக்கு ஆலயம் அமைத்து வழிபட துவங்கினர். அம்மனின் சிறப்பு வழிபாடுகள் வெப்பம் அதிகமுள்ள நாட்களிலேயே நடக்கும். குளிர்ச்சியை அதிகப்படுத்தும் அனைத்து வழிபாடுகளும் அப்போது நடைபெறுவதால் இந்த தேவிக்கு சீதளா தேவி என்ற பெயரும் உண்டு. அன்னை முத்து மாரியம்மனுக்கு 61 ஆண்டுகளாக பக்தர்கள், சான்றோர்களின் உதவியோடு 42 நாட்கள் விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடக்கும் பால்குட திருவிழாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திகடனை செலுத்துவர்கள்.

Tags : Karaikudi Muthumariamman Temple Palkutta Festival ,
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்