×

படுபாதாளத்துக்கு சென்ற பட்டு வர்த்தகம்: கொரோனாவால் நெசவாளர்கள் கடும் பாதிப்பு

காஞ்சிபுரம், மார்ச்  18: கொரோனா வைரஸ் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் பட்டு வர்த்தகம் படு பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால், நெசவாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெசவும், விவசாயமும் இரு கண்கள் போல பிரதான தொழிலாக இருந்து வந்தது.  விவசாயத்துக்கு முக்கியமான நிலங்கள் வீட்டுமனைகளாகவும், நீராதாரமாக விளங்கிய ஏரிகள் ஆக்கிரமிப்பாலும் விவசாயத் தொழில் பின்னடைவை சந்தித்தது.மற்றொரு முக்கிய தொழிலான நெசவுத் தொழில்  ஆன்லைன் வர்த்தகத்தாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வாலும், போலி பட்டுப்புடவைகள் வரத்தாலும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கூட்டுக் குடும்பமாக செய்த நெசவுத் தொழில் தற்போது, சிதறி சின்னாபின்னமாகி, குடும்ப உறுப்பினர்களான பெண்கள் கம்பெனி வேலைக்கும், ஆண்கள் வாட்ச்மேன் வேலைக்கும் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்ட நெசவு தொழிலில், தற்போது சுமார்  20 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக குறைந்த முதலீட்டில் அதிக பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக கைத்தறி நெசவு தொழில் இருந்து வருகிறது.

காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இந்த கைத்தறி நெசவு தொழிலை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். சில தனியார் பட்டு உற்பத்தியாளர்களின் போலி பட்டு சேலைகளாலும், ஆன்லைன் வர்த்தகத்தாலும் நெசவுத்தொழில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதையொட்டி, நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்திலேயே முதலாவதாக ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்த இன்ஜினியருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், கோயில்கள் மற்றும் பட்டு சேலைகளுக்கு உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா நகரமான காஞ்சிக்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா வைரஸ் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் ₹50 லட்சம் அளவுக்கு பட்டுச் சேலை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நெசவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகை முடிந்தபிறகு சுணக்கமாக இருந்த பட்டு சேலை வியாபாரம், ஏப்ரல் மாதத்தில் சூடுபிடிக்கும் என நெசவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த வேளையில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் டெல்லி, கேரளா, கர்நாடகா என இந்திய அளவில் 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தமிழக்திலும் கொரோனா அறிகுறியுடன் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகளவில் பொது இடங்களில் கூட வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால் வெளியூர்கள், வெளிமாநிலங்களில் இருந்து பட்டு சேலை எடுக்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.ஏற்கனவே மூலப்பொருள்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்பட பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வியாபாரம் பாதிப்படைந்துள்ளதாக நெசவாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

Tags : weavers ,Corona ,
× RELATED அறந்தாங்கி அருகே பரபரப்பு திமுக நீர்மோர் பந்தல் தீ வைத்து எரிப்பு