×

உத்திரமேரூர் அருகே பரபரப்பு ஏரியில் தூர்வாருவதை கண்டித்து மக்கள் போராட்டம்

உத்திரமேரூர், மார்ச் 18:  உத்திரமேரூர் அடுத்த தண்டரை கிராமத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.  பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் 3 மதகுகள் உள்ளன. இந்த மதகுகள் வழியே வெளியேற்றப்படும் உபரிநீரை கொண்டு தண்டரை கிராமத்தை சேர்ந்த சுமார் 200 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். இந்த நிலத்தில் நெல், வேர்க்கடலை, கரும்பு ஆகியவை பயிரிடப்படும். இந்த ஏரி, முழு கொள்ளளவை எட்டினால் கிராம விவசாயிகள் முப்போகம் பயிரிடுவர். மேலும் இந்த ஏரி நீர் விவசாயம், நிலத்தடி நீர் பாதுகாப்பது மட்டுமன்றி கிராம மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக, தொடர்ந்து இந்த ஏரியை தூர்வாரப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோல் தூர்வாரப்படும்போது ஏரியினுள் மிகப் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஏரியில் தண்ணீர், முழுமையாக நிரம்பாமல் பள்ளங்களில் தேங்கிவிடுகிறது. மேலும் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்படுத்துவதால, நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையொட்டி, இந்தாண்டு ஏரியை தூர்வாரப்போவதாக கூறி, பொக்லைன் இயந்திரம் ஏரியின் அருகே நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள், அங்கு கூட்டமாக திரண்டு சென்றனர். பின்னர், பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலவாக்கம் - தண்டரை கிராம சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராம மக்களின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது இந்த ஏரிதான். ஆண்டுதோறும் ஏரியை தூர்வார வருபவர்கள், கரைகளை பலப்படுத்தவது இல்லை. கால்வாய்களை சீரமைப்பதும் இல்லை. மதகுகளை பராமரிப்பதும் இல்லை. மாறாக பெரிய அளவிலான பள்ளத்தை மட்டும் எடுத்து செல்கின்றனர். ஏரியில் எடுக்கப்படும் மண் குறித்து எந்த கணக்கும், தகவலும் தெரிவிப்பதில்லை.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதுடன் ஏரியில் முறையாக மழைநீர் தேங்காமல் வீணாகிறது. கோடை காலங்களுக்கு முன்னே கிராமத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு, ஏரியை தூர்வாரப் போவதாக கூறி பள்ளம் எடுக்க முயற்சிக்கின்றனர். அதை நாங்கள் தடுத்துவிட்டோம். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் கிராமத்தில் உள்ள ஏரியை பாதுகாப்பதுடன், நிலத்தடி நீரை சேமிக்க உரிய வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

Tags : flooding ,Parabaram Lake ,Uthramerur ,
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து...