×

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கீழத்தூவலில் மீன்பிடி திருவிழா ஆர்வத்துடன் கிராமமக்கள் பங்கேற்பு

சாயல்குடி, மார்ச் 18: முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கண்மாயில் நடந்த மீன்பிடி திருவிழாவில், கிராமமக்கள் ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர்.
முதுகுளத்தூர் பகுதியில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தொடர் வறட்சியால் கண்மாய்கள் வறண்டு காணப்பட்டது. ஆண்டுதோறும் மழை பெய்தாலும் கூட, கண்மாய் பெருகும் அளவிற்கு கனமழை பெய்யவில்லை. 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்த வடகிழக்கு பருவ மழைக்கு முதுகுளத்தூர் பகுதியில் பெரும்பாலான கண்மாய், ஊரணி நிறைந்தது.

இந்நிலையில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கீழத்தூவல் கண்மாய் நிறைந்து காணப்பட்டது. கண்மாய் பெருகியதும் கெண்டை வகை மீன்கள், கெளுத்தி, உளுவை, கொறவை, அயிரை போன்ற மீன்கள் வந்தது. அதனுடன் கிராமமக்கள் வெளிமார்க்கெட்டில் விலைக்கு வாங்கி வந்த மீன்களையும் விட்டு வளர்த்து வந்தனர். வலை, தூண்டில் போன்றவற்றின் மூலம் மீன்பிடிக்க கிராமமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வெளியூர் நபர்கள் வந்து பிடித்து விட கூடாது என்பதற்காக ஊர் காவலர்கள் நியமிக்கப்பட்டு, காவல்காத்து வந்தனர்.

கண்மாயில் கிடந்த தண்ணீரை இப்பகுதியில் பயிரிடப்பட்ட மிளகாய், பருத்தி போன்ற பயிர்களுக்கு தொடர்ந்து பாய்ச்சப்பட்டது. இதனால் கண்மாய் தண்ணீர் வற்றியது. இதனையடுத்து கிராமமக்கள் கண்மாயில் வளர்ந்து வந்த மீன்களை பிடிக்க முடிவு செய்தனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் தண்ணீர் பெருகி, இயற்கை முறையில் வளர்ந்து வந்த மீன்களை பிடிக்க திருவிழா போன்றுகளை கட்ட வேண்டும் என முடிவு செய்து மீன்பிடிக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து கீழத்தூவல், மேலத்தூவல், கிருஷ்ணாபுரம், மைக்கேல்பட்டிணம் மற்றும் அருகிலுள்ள கிராமமக்கள் நேற்று கச்சா வலை, துணிகள், பாத்திரங்கள் கொண்டு மீன்களை ஆர்வத்துடன் பிடித்து சென்றனர். நபர் ஒன்றிற்கு சுமார் 2 முதல் 5 கிலோ வரை எடையுள்ள மீன்களை பிடித்து சமையல் செய்வதற்காக வீடுகளுக்கு பிடித்து சென்றனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு கிராமமக்கள் ஒற்றுமையாக கூடி மீன் பிடித்தது மகிழ்ச்சியாக இருந்ததாக கிராமமக்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை