×

அம்மன் கோயிலில் மாசா திருவிழா

சாயல்குடி, மார்ச் 18: கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் அரியநாயகி அம்மன் கோயில் வருடாந்திர மாசா திருவிழா நேற்று நிறைவடைந்தது.
கடலாடி அருகே உள்ள ஆப்பனூரில் ஆண்டுதோறும் மாசி மாதம் முழுவதும் மாசா எனப்படும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதன் முதல் நிகழ்ச்சியாக கடந்த மாசி மாதம் முதல் செவ்வாய் கிழமை முள்ளி நடுதலுடன் துவங்கியது. ஆப்பனூர் ஆண்டியனேந்தல் கிராமத்திலுள்ள அரியநாயகி அம்மன் ஆலயத்தில் கணபதி ஹோமம் மற்றும் யாகச்சாலைகள் வளர்க்கப்பட்டு முதல்கால பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. இக்கோயில் வளாகத்தில் வளர்ந்திருந்த முள்ளி எனப்படும் நெறுஞ்சி வகை செடியை எடுத்து ஊர்வலமாக வந்து ஆப்பனூர் கிராம மையத்தில் உள்ள முளைக்கொட்டு திண்ணை கோயிலில் நடப்பட்டது.

அன்று முதல் இச்செடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பெண்கள் கும்பி அடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் ஆடியும் உற்சாகமாக ஒரு மாதம் முழுவதும் கொண்டாடினர். இத்திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பெண்கள் பொங்கலிட்டனர். குழந்தைகளுக்கு மொட்டையடித்தும், மாவிளக்கு, அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்தும் கிடா, கோழி பலியிட்டும் நேர்த்திகடன் செலுத்தினர். விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : festival ,Amman ,temple ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தீ...