×

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

ராமநாதபுரம், மார்ச் 18: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில், கொரோனா வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவிக்கையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு முற்றிலும் இல்லை என்ற போதிலும், அண்டை மாநிலங்களிலிருந்து இந்நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும். இதற்காக கலெக்டர் தலைமையில் பொது சுகாதாரத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்போடு மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சாதாரண காரணங்களுக்காக அண்டை மாநிலம்,அயல்நாடு பயணம் செல்வதை தவிர்த்திட வேண்டும். மேலும், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான கோவில், மசூதி, தேவாலயங்கள் போன்ற இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், சுற்றுப்புறத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும்.

மாவட்டத்திலுள்ள ராமநாத சுவாமி திருக்கோயில், அப்துல்கலாம் தேசிய நினைவகம், ஏர்வாடி தர்ஹா, உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோயில் போன்ற இடங்களிலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களிலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் அது குறித்து விழிப்புணர்வு தகவல் மையம் அமைத்திட பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் தனிநபர் சுகாதாரம் பேணும் வகையில் தொடர்ந்து சோப்பு, சானிடைசர் பயன்படுத்தி சில நேரங்களுக்கு ஒருமுறை கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களையும் சுத்தமாக பராமரிப்பதோடு உடன் பணிபுரியும் அலுவலர்களுக்கும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விடுமுறை நாட்களில் குழுவாகக் கூடி விளையாடுவதை தவிர்ப்பது, மேலும் வயது முதியவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இதுதவிர, திரையரங்குகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள்,ரயில்கள் ஆகியவற்றில் கைப்பிடி மற்றும் தரைப்பகுதிகளை அவ்வப்போது பினாயில் பயன்படுத்தி சுத்தம் செய்திட வேண்டும். பொதுமக்களும் தாங்கள் பயன்படுத்தக் கூடிய வாகனங்கள், செல்போன் போன்ற தினசரி உபயோகப்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக பொதுசுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

Tags : Collector ,speech ,meeting ,Ramanathapuram district ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை...