×

உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்து மூன்று மாதமாகியும் அறிமுக கூட்டம் நடத்தவில்லை புலம்பும் பஞ்சாயத்து தலைவர்கள்

திருமங்கலம், மார்ச் 18: உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று கிராம பஞ்சாயத்து தலைவராகி மூன்று மாதங்கள் கடந்த பின்பும் இதுவரையில் பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி செயலர்களுக்கான அறிமுக கூட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் நடைபெறவில்லை என தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கிராம ஊராட்சிகளுக்கான தேர்தல் முடிவடைந்து மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆணிவேராக திகழும் சிற்றூராட்சி தலைவர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பஞ்சாயத்து தலைவர்களின் அறிமுக கூட்டம் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது. ஆனால் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் இதுவரையில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் அறிமுக கூட்டம் நடைபெறவில்லை. மக்கள் பிரதிநிதிகள் பதவி ஏற்பதற்கு முன்பு ஒவ்வொரு வாரமும் ஒன்றிய அலுவலகங்களில் அதிகாரிகள் ஊராட்சி செயலர்களை அழைத்து கிராம வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தினர்.

ஆனால் தற்போது மக்கள் பிரதிநிதிகளாக பஞ்சாயத்து தலைவர்கள் வந்தபின்பு மாதத்திற்கு ஒருமுறையாவது அவர்களை அழைத்து அதிகாரிகள் ஒன்றிய அளவில் கூட்டங்கள் நடத்தவேண்டும். மாவட்டத்தில் மற்ற ஒன்றியங்களில் பஞ்சாயத்து தலைவர்கள் அறிமுக கூட்டம் தொடர்ந்து மாதந்திர கூட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், திருமங்கலத்தில் மட்டும் இதுவரையில் நடைபெறவில்லை. அதே நேரத்தில் இந்த ஒன்றியத்தில் அதிகாரிகள் ஊராட்சி செயலர்களை ஒன்றிய அலுவலகத்திற்கு வரவழைத்து அவ்வப்போது கூட்டங்களை நடத்துகின்றனர். கூட்ட முடிவுகளை பஞ்சாயத்து தலைவரிடம் தெரிவித்துவிடுங்கள் என அதிகாரிகள் கூறி சென்றுவிடுகின்றனர். ஆனால் ஊராட்சி செயலர்கள் இதனை தலைவரிடம் கூற தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைவரிடம் கூறினால் அவர்கள் ஆவேசப்படுவர் என ஊராட்சி செயலர்கள் புலம்புகின்றனர். இதில் அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் இருவரிடமும் பதில் பேசமுடியாமல் கிராம ஊராட்சி செயலர்கள் திணறிவருகின்றனர்.

இது குறித்து பெயர் கூற விரும்பாத பஞ்சாயத்து தலைவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் தேர்தலில் வெற்றிபெற்று தலைவர்களாக பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் பெரிய அளவில் நிதி எதுவும் பஞ்சாயத்துகளுக்கு வரவில்லை. இதுகுறித்து தலைவர்கள் கேள்வி எழுப்பிவிடுவர் உள்ளிட்ட காரணங்களால் திருமங்கலம் ஒன்றியத்தில் தலைவர்களுக்கான அறிமுக கூட்டம் இதுவரையில் நடைபெறவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, செல்லம்பட்டி, டி.கல்லுப்படடி உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் உள்ள பஞ்சாயத்துகளின் தலைவர்கள், துணைத்தலைவர்களின் கூட்டம் நடந்தது. அதன்பின்பு தலைவர்களுக்கு என இதுவரையில் ஒரு கூட்டமும் திருமங்கலம் ஒன்றியத்தில் நடைபெறவில்லை. ஆனால் பஞ்சாயத்து செயலர்களுக்கு மட்டும் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி வருகின்றனர்’’ என்றனர்.

Tags : panchayat leaders ,meeting ,elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...