×

கொரோனா வைரஸ் எதிரொலி தியேட்டர்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடல்

தூத்துக்குடி, மார்ச் 18: கொரோனா வைரஸ் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தியேட்டர்கள், வர்த்தக நிறுவனங்கள், பூங்காங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் முக்கியச் சாலைகளில் நடமாட்டம் குறைந்ததோடு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர் வீட்டில் முடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவில் வூகான் மாகாணத்தில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயாக பரவி வருகிறது. இந்த நோயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அனைத்து சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் தூத்துக்குடியில் ஜின் பாக்டரி ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் மூடப்படுமோ என அச்சப்பட்டனர். இதனால் பொதுமக்கள் இரவு 9 மணி அளவில் அந்த மார்க்கெட்டில் பலசரக்கு மற்றும் காய்கறி, பழ விற்பனை பிரிவுகளில் குவிந்தனர். இதேபோல் ஆங்காங்கே இருந்த பலசரக்கு, காய்கறி கடைகளிலும், காமராஜர் காய்கனி மார்க்கெட்டிலும் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் நள்ளிரவு வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரிகள் பொருட்களை விற்றனர். கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய ஊர்களில் மொத்தம் உள்ள 18 தியேட்டர்கள் அனைத்தும் நேற்று முதல் மூடப்பட்டன. ஏற்கனவே புதுப்படம் திரையிட்டால் தான் கூட்டம் வரும் என்ற நிலையில், தற்போது 15 நாட்கள் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டதால், ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது என்று உரிமையாளர்கள் திகைப்பு அடைந்துள்ளனர். இதனிடையே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மால்கள், மல்ட்டி சூப்பர்மார்க்கெட்டுகள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் நேற்று இரவு வரையில் விற்பனை கனஜோராக நடந்தது.

ஓரு சில மால்களில் சிறிய வழிகளின் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து வர்த்தகம் நடந்தது. பீச்ரோடுகளில் காலையில் வாக்கிங் செல்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தெற்கு பீச்ரோட்டில் உள்ள படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கின்டர்கார்ட்ன் முதல் மேல் நிலை வகுப்புகள் வரையிலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் டாஸ்மாக் பார்கள் முதல் ஓட்டல் பார்கள் வரையில் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் டாஸ்மாக் கடைகளில் மட்டும் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் மக்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு துறைகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  இதுதொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறுகையில், ‘‘சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் பாதிப்பு ஏற்பட்ட ஒரு மாத காலத்திலேயே அந்த வைரஸ் குறித்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தற்போது தமிழக அரசின் அறிவிப்புக்கு பின்னர் தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் ஓட்டல், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது.

அசைவ உணவு மற்றும் அசைவ உணவு பொருட்கள் விற்பனை கடும் விலை வீழ்ச்சியையும் மந்தத்தையும் சந்தித்துள்ளது. அதே நேரத்தில் காய்கறி விற்பனை அதிகரித்துள்ளது. தூத்துக்குடி நகரில் உள்ள லாட்ஜ்களில் தங்கியுள்ள வெளி மாநில, வெளிநாட்டினர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி நகரில் உள்ள டிஎஸ்எப் பிளாசா, வேலவன் ஹைபர் மார்க்கெட், பெரிசன் பிளாசா ஆகிய வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதை காவல்துறை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் வரும் 31ம் தேதி வரை ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் மட்டுமே நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக திருமணங்கள் புக் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண விழா நடைபெற்ற பின்னரும், நடைபெறும் முன்னரும் கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையம், பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில தெளிக்கப்பட்டு வருகிறது. கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடு நடக்கும் முன்னரும் பின்னரும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மாநகர் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூடும் 10 இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன’’ என்றனர். இவ்வாறு  கொரோனா வைரஸ் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தியேட்டர்கள்,  வர்த்தக நிறுவனங்கள், பூங்காங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் முக்கியச்  சாலைகளில் நடமாட்டம் குறைந்ததோடு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட  பெரும்பாலானோர் வீட்டில் முடங்கியுள்ளனர்.

Tags : CORONA VIRUS Echoes ,theaters ,businesses ,
× RELATED PVR Inox திரையரங்குகளில் ஈஷா...