×

நிலக்கோட்டையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

வத்தலக்குண்டு மார்ச் 18: நிலக்கோட்டையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளனர். இவற்றை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிலக்கோட்டை நகரின் மையப்பகுதியில் கொங்கர்குளம் உள்ளது. நகரின் குடிநீர் தேவைக்கு இக்குளம் முக்கிய நீராதாரமாக உள்ளது. குளத்தின் அருகே 6 வீடுகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. வரும் கோடைக்காலத்தில் அப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதே போல நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் நான்குரோடு அருகே உள்ள கும்மந்தாங்குளத்திலிருந்து அக்கரகாரப்பட்டி கண்மாய்க்கு செல்லும் ஓடை, பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு ஓடையை ஆக்கிரமித்து 7 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியிலும் நிலத்தடி நீரின் நிலை கோடை காலத்தில் கேள்விக்குறியாகி வருகிறது. இதுதொடர்பாக நிலக்கோட்டை தாலுகா நீர்வள பாதுகாப்பு இயக்கத்தலைவர் சின்னச்சாமி, நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் திண்டுக்கல் ஆர்டிஓ, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் கோடைக்காலத்தில் பொதுமக்கள் தண்ணீருக்கு அலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தடி நீரை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சின்னசாமி கூறுகையில், ‘‘பேருந்து நிலையம் அருகே ஓடையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்கள் தாசில்தாரிடம் பட்டா வாங்க முயற்சித்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி நிலத்தடி நீரை காக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags : activists ,removal ,landfill ,
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...