×

நெல்லை பஸ், ரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

நெல்லை, மார்ச் 18:  நெல்லை பஸ், ரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இந்தியாவில் முதலில் கேரளாவில் பரவிய நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் தாவியுள்ளது. கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிராவில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் அச்சத்தால் தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் 31ம்தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. ஏற்கனவே திட்டமிட்டபடி பிளஸ்2, பிளஸ்1 தேர்வுகள் மட்டுமே நடந்து வருகிறது. பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். விடுதி மாணவர்களும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களும் இயக்கப்படாததால் சாலைகளிலும் போக்குவரத்து குறைந்தது.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதனை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் துவக்கி வைத்தார். முகாமில் கைகழுவும் முறை குறித்து பயணிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் கூறுகையில், அரசு உத்தரவுப்படி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் நெல்லை மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வைரஸ் குறித்த விளக்க துண்டு  பிரசுரங்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு பிரசாரம் ேமற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள ஆட்டோ, ஷேர் ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் மற்றும் அவர்களின் சொந்த வாகனங்களை கிருமி நாசினிகளை பயன்படுத்தி அடிக்கடி துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொதுமக்கள் கூடும் இடங்களான தியேட்டர், மால் உள்ளிட்டவைகளை 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களும் சுத்தமாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைகள்  வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் பஸ், ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், அதிகாரிகள், மண்டல உதவி ஆணையர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், சுகாதாரத்துறை அலுவர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மறுஉத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கான அறிவிப்பு முகப்பு நுழைவுப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் பலர், பெற்றோருடன் வந்தனர். ஆனால் அறிவியல் மையம் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எம்.குமார் கூறுகையில், அரசு மூடஉத்தரவிட்டுள்ளதால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு கருதி இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வந்த பின்னர் திறக்கப்படும். அதுவரை உள்பகுதியில் பராமரிப்பு பணிகள், அலுவலகப்பணிகள் தொடர்ந்து நடக்கும் என்றார்.

நெல்லை  சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே மருத்துவத்துறை சார்பில்  மருத்துவ சுகாதார ஆய்வாளர் ஆட்லின் ஜெனிஸா தலைமையில் தனியார் ஆம்புலன்ஸ்  ஊழியர்கள் சுபா, பாலசுப்பிரமணியன் மற்றும் ரயில்வே போலீசார்  உள்ளிட்டோர் பிளாட்பாரங்களில் காத்திருக்கும் பயணிகளிடம் சோப்பு மற்றும் சானிட்டரிஸ், கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் போன்ற ஆலோசனை வழங்கினர். இதுபோல் நெல்லை வழியாக சென்ற ரயில் பயணிகளிடமும் பல்வேறு ஆலோசனைகள் அடங்கிய துண்டு  பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

இதுபோல் அரசு விரைவு போக்குவரத்து கழக  பஸ்கள் நீண்ட தூரம் இயக்கப்படுகின்றன. இதில் வெளி மாவட்டம், வெளி மாநில  பயணிகள் அதிகப்படியானவர்கள் தினமும் பயணிக்கின்றனர். இந்நிலையில் அரசு  விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பணிமனைக்குள் காலையில் வரும் போதும்,  மாலையில் பணிமனையில் இருந்து புறப்படும் போதும் என இருமுறை கிருமி நாசினி  மருந்து தெளிக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி நெல்லை அரசு விரைவு  போக்குவரத்து கழக வண்ணார்பேட்டை, கேடிசி நகர் பணிமனைகளில் உள்ள 50க்கும்  மேற்பட்ட விரைவு பஸ்கள், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள், இருக்ைக வசதி கொண்ட  குளிர்சாதன பஸ்கள், படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன வசதி உள்ள விரைவு பஸ்கள்  பணிமனைக்கு வந்தவுடன் சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.  மாலையில் புறப்பட்டு செல்லும் விரைவு பஸ்களிலும் கிருமிநாசினி மருந்து  தெளிக்கப்படுகிறது. ஆனால் டிரைவர், கண்டக்டர்களுக்கு மாஸ்க், கையுறை, சானிட்டரிவேர்ஸ் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags : railway stations ,
× RELATED செங்குறிச்சி கிராமத்தில் புதியதாக...