×

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் குளிக்க பக்தர்களுக்கு எச்சரிக்கை

நெல்லை, மார்ச் 18:  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் எதிர்பாராத விதமாக ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனை குறித்து எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவி வருவதாகவும், இதுகுறித்து பக்தர்களுக்கு எச்சரிக்கை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோடீஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அதிகப்படியான பக்தர்கள் வரும் கோயில்களில் அமைந்துள்ள தெப்பக்குளத்தினை பராமரித்து பாதுகாக்கவும், தெப்பக்குளத்தின் ஆழம் எவ்வளவு என்பதையும், குளத்தில் குளிக்க அனுமதியில்லை என்பதையும் வலியுறுத்தி எச்சரிக்கை பலகை வைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.  

இதன்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பனீந்திரரெட்டி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குளிக்க அனுமதியில்லை என்ற எச்சரிக்கை போர்டு வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நெல்லை டவுன் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் உள்ள பொற்றாமரை குளம், வெளி தெப்பக்குளம் பகுதியில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில் ‘‘ 15 அடி ஆழமுள்ள தெப்பக்குளத்தில் இறங்கி குளிக்க பக்தர்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை. எதிர்பாராத விபத்துக்களை தவிர்க்க கேட்டு கொள்ளப்படுகின்றனர்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல் நெல்லை இணை ஆணையர் சரகத்தில் உள்ள தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களில் பக்தர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : devotees ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...