×

சிபிசிஐடிக்கு மாறுகிறது வழக்கு டிஸ்மிஸ் காவலர்கள் 2 பேரையும் கைது செய்ய தீவிரம்

புதுச்சேரி, மார்ச் 18: புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த ஜோடியிடம் பணம் பறித்ததாக எழுந்த புகாரின்பேரில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 2 காவலர்களையும் கைது செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.புதுச்சேரி, அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள ஒரு விடுதியில் சில தினங்களுக்கு முன்பு 2 ஜோடிகளிடம் அங்கு ஆய்வுக்கு சென்ற போலீசார் சோதனை என்ற பெயரில் மிரட்டி பணம் பறித்ததாகவும், அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தகவல் பரவியது. இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சர்ச்சையில் சிக்கிய பெரியகடை காவல் நிலைய போலீஸ்காரர் சதீஷ்குமார், ஐஆர்பிஎன் சுரேஷ் ஆகிய இருவரும் கடந்த 14ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே 16ம் தேதி கவர்னர் கிரண்பேடி பெரியகடை காவல் நிலையத்துக்கு சென்று இவ்விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பினார்.

அதன்பிறகு மேற்கண்ட 2 காவலர்கள் மீதும் கூட்டு சேருதல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய 2 பிரிவுகளில் பெரியகடை போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதனிடையே சர்ச்சையில் சிக்கிய 2 காவலர்களும் தலைமறைவாகினர். இந்த நிலையில் வழக்குபதிவு செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் காவலர்கள் 2 பேரையும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்து சீனியர் எஸ்பி (சட்டம்-ஒழுங்கு) ராகுல் ஆல்வால் நேற்றுமுன்தினம் இரவு உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், காவலர்கள் சதீஷ்குமார், சுரேஷ் இருவரும் ஒழுங்கீனமாக செயல்பட்டுள்ளதால் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

புதுவை விடுதியில் தங்கியிருந்த ஜோடிகளிடம் பணம் பறித்த விவகாரத்தில் 2 காவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ஜோடி தரப்பில் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படாததும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. மேலும் விடுதியில் ஜோடி தங்கியிருப்பது தொடர்பாக எங்கிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது? என்பது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதில் யாரோ மர்ம ஆசாமி சொந்த தொலைபேசி மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசுவதாக கூறி பெரியகடை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசியிருப்பது அம்பலமாகி உள்ளது.

அந்த மர்ம ஆசாமியை பிடித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தங்களது பாணியில் கவனித்தால் திரைமறைவில் நடந்துள்ள பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழும் என்று தெரிகிறது. இதனால் தலைமறைவான 2 காவலர்களை மட்டுமின்றி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்த மர்ம நபரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.  டிஸ்மிஸ் காவலர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இருவரும் இவ்வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் முறையிட உள்ளனர். இதற்கிடையே இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கோப்பு டிஜிபிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags : arrest ,CBCID ,
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...