×

காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு வழங்க 100 புதிய ஸ்கூட்டர்கள்

புதுச்சேரி, மார்ச் 18:  புதுச்சேரியில் பெண் போலீசாருக்கு வழங்குவதற்காக 100 இருசக்கர வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி காவல் துறையில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பிரச்னைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் பீட் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பீட் போலீசாருக்கு ஏற்கனவே சைக்கிள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆண்கள் மற்றும் பெண் போலீசார் இருவருக்கும் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடற்கரையில் ரோந்து செல்லும் போலீசாருக்கு ஊர்ந்து செல்லும் வகையில் ஒரு சிறிய வாகனம் ஏற்கனவே வழங்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு ஸ்கூட்டர்கள் வழங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தற்போது புதுடெல்லியில் இருந்து 100 ஸ்கூட்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. கண்டெய்னர் லாரி மூலம் வந்த அந்த பைக்குகள் நேற்று மதியம் டிஜிபி அலுவலக வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டு, வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பைக்குகள் புதுச்சேரி மட்டுமின்றி காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு வழங்கப்பட உள்ளது. இது குறித்து காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ஆண்டுதோறும் சில நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இவை மார்ச் மாதத்தில் தங்கள் சார்பில் ஒரு குறிப்பிட்ட நிதியை இதற்காக பயன்படுத்துகின்றன.
இந்நிலையில் ஒரு தனியார் பைக் நிறுவனம் 100 ஸ்கூட்டர்கள் வழங்க முன் வந்திருக்கிறது. அந்த ஸ்கூட்டர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இதற்காக விழா நடத்தப்பட்டு, முதல்வர் நாராயணசாமி பெண் போலீசாருக்கு வழங்குவார், என தெரிவித்தனர்.

Tags : police officers ,police stations ,
× RELATED 5 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால்...