×

முக கவசம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

புதுச்சேரி, மார்ச் 18: புதுச்சேரி மருந்து கடைகளில் மாஸ்க் பதுக்கல் தொடர்பாக சட்டமுறை மற்றும் எடையளவு துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். புதுவையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாஸ்க் (முக கவசம்) அணிய வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் மாஸ்க் வாங்க மருந்து கடைகள், பார்மஸி ஸ்டோர்களுக்கு சென்றால் அங்கு ஸ்டாக் இல்லை என கூறி பொதுமக்களை திருப்பி அனுப்புகின்றனர்.

இதனால் புதுவையில் மாஸ்க் பதுக்கல் மற்றும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புதுச்சேரி சட்டமுறை மற்றும் எடையளவு துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மருந்து வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள் சோதனை நடத்தப்படும் என தெரிவித்திருந்தனர். அதன்படி கடந்த 3 நாட்களாக சட்டமுறை மற்றும் எடையளவுத்துறை அதிகாரிகள் துறை அதிகாரி தயாளன் உத்தரவுக்கிணங்க தனி குழுவாக மருந்து கடைகளில், பார்மஸி ஸ்டோர்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புஸ்சி வீதி, உழவர்கரை, காலாப்பட்டு, கோரிமேடு, கதிர்காமம், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில் பெரும்பாலான கடைகளில் முக கவசம் விற்பனைக்கு இல்லாதது தெரியவந்தது.

ஒருசில கடைகளில் மட்டும் மிக குறைந்த எண்ணிக்கையிலான முக கவசங்களே விற்பனைக்கு இருந்தன. மாஸ்க் தயாரிப்பு நிறுவனங்கள் புதுச்சேரியில் இல்லாத நிலையில் அவை சென்னையில் இருந்துதான் வாங்கி விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது அங்கே மாஸ்க் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் புதுச்சேரி வியாபாரிகள் அதை வாங்கி விற்க முன்வர வில்லை என்பது அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்தது. இருப்பினும் அங்கு மாஸ்க்குகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை மட்டும் அதிகாரிகள் சோதனை நடத்திவிட்டு சென்றுள்ளனர்.

நேற்று எல்லைபிள்ளைச் சாவடியில் உள்ள மருந்து கடைகளில் எடையளவுத்துறை இன்ஸ்பெக்டர்கள் குமார், அய்யனார் தலைமையிலான குழு காவலர்கள் உதவியுடன் சென்று சோதனை நடத்தியது. பின்னர் அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில தினங்களாக புதுச்சேரி நகர பகுதி முழுவதும் மருந்து கடைகளில் சோதனை நடத்தினோம். ஆனால் எங்கேயேும் மாஸ்க் பதுக்கி வைக்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளோம். இதுவரையிலும் 90 மருந்து கடைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது, என்றனர்.

Tags : raids ,drug stores ,
× RELATED ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்...