×

வடலூர் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் விடுதிகள்

நெய்வேலி, மார்ச் 18: வடலூர் பகுதியில் செயல்படும் விடுதிகளை கடலூர் மாவட்ட சமூக நலத்துறை மூலம் பதிவு பெற்று விடுதி உரிமையாளர்கள் நடத்தி வருகின்றனர். இங்கு குழந்தைகள் இல்லங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லங்கள், ஊனமுற்றோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இதைத்தவிர தனிநபரின் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகள் மாணவ, மாணவிகளுக்கு என விடுதிகள் நடத்தி வருகின்றன. மேலும் வடலூரில் வள்ளலார் தெய்வ நிலையங்களில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சன்மார்க்க பக்தர்கள் ஆண்கள், பெண்கள் ஊனமுற்றோர் உள்ளிட்டோர் அங்குள்ள விடுதிகளில் தங்கி உள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்காக நடத்தப்படும் விடுதிகளில் ஏழு குழந்தைகளுக்கு ஒரு கழிப்பறை, பத்து குழந்தைகளுக்கு ஒரு குளியலறை உடன் தண்ணீர் இருக்க வேண்டும்.

மேலும் விடுதிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் உணவுகள் சுகாதாரமாக இருக்க வேண்டும். இங்குள்ள சமையல் கூடம், உணவு அருந்தும் கூடம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சமையல் கூடத்தில் மாணவ, மாணவிகளை கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. மேலும் தங்குமிடம் விசாலமாகவும், காற்றோட்டமாகவும் வெளிச்சத்துடன் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் அறைகளை பாதுகாப்பு மற்றும் பராமரிப்புகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் 18 வயதுக்கு மேல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு மேற்கொண்ட அடிப்படை வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளது. ஆனால் ஏராளமான விடுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. மேலும் கழிப்பறை, குளியலறை சுகாதாரமான குடிநீர் எதுவும் இல்லாமல் ஏராளமான விடுதிகள் வடலூர் பகுதியில் இயங்கி வருகின்றது.

இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில், குழந்தைகள், பெண்கள், முதியோர் பாதுகாப்பு இல்லங்கள் நடத்துவதில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருகிறது. இங்குள்ள ஒரு சில இல்லங்கள் மட்டுமே நேர்மையாக நடத்தப்படுகின்றது. எனவே மேற்கொண்ட இடங்களில் அடிப்படை வசதிகள் செயல்படுத்தாத விடுதிகள் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : Hotels ,Vadalur ,facilities ,
× RELATED சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டால் நடவடிக்கை