×

திட்டக்குடி பேரூராட்சி கோழியூரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

திட்டக்குடி, மார்ச் 18:  திட்டக்குடி பேரூராட்சி கோழியூரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கோழியூர் 17, 18வது வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், ஆதிதிராவிட மக்களின் நீண்டகால கோரிக்கையான பெண்கள் பொது சுகாதார வளாகம் அமைத்து தர வலியுறுத்தியும், இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த விளையாட்டு மைதானம் அமைத்து தர வலியுறுத்தியும், தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வலியுறுத்தியும், இப்பகுதியில் இயங்கும் ஆதிதிராவிட நல பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்கால நலன் கருதி அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை மாறுதல் செய்து வேறு ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்.

ஆதிதிராவிடர் பள்ளியில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாய சங்கத்தினர் இணைந்து திட்டக்குடி பேரூராட்சியை கண்டித்து அங்குள்ள நியாயவிலைக்கடை முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இச்சங்கத்தின் துணை செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். பாண்டுரங்கன், பாலமுருகன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறுகுறு விவசாய சங்கத்தின் தலைவர் பேரின்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாமணி, திட்டக்குடி இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஆலோசனை செய்து தங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று போராட்டக்குழுவினர் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : waiting struggle ,
× RELATED காத்திருப்பு போராட்டம் 5வது நாளாக நீடிப்பு