×

கொரோனா பரவுவதை தடுக்க ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்: காவல் நிலையங்களில் விழிப்புணர்வு

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் பஸ் நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கோயம்பேடு பஸ் நிலையத்தில் அண்ணாநகர் காவல் துணை ஆணையர் முத்துசாமி மற்றும் ஆய்வாளர்கள் மாதேஷ்வரன், முருகன் தலைமையில் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு பஸ்களில் செல்லும் பயணிகள்  மற்றும் அரசு ஒட்டுனர்கள், நடுத்துனர்களுக்கு சிறப்பு  மருத்துவ குழுவினர் தெர்மல் ஸ்கேனிங் மூலம் பரிசோதனை செய்தனர். அப்போது, காய்ச்சல் அறிகுறி இருந்தவர்கள் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இதேபோல், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வேளச்சேரி ரயில் நிலையம் மற்றும் அங்கிருந்து இயக்கப்பட்ட ரயில் பெட்டிகளை கழுவி கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இந்த வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எவ்வாறு பரவுகிறது என்ற விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. காவல் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் நபர்கள் காவல் நிலையத்தினுள் வருவதற்கு முன், கை கழுவும் வகையில் காவல் நிலையத்திற்கு வெளியே ஒரு வாளியில் தண்ணீர், கை கழுவ சோப்பு  கலந்த நீர் மற்றும் கை துடைக்க டிஷ்யூ பேப்பர் வைக்கப்பட்டுள்ளது.

Tags : bus stations ,corona spread ,police stations ,
× RELATED சென்னையில் உரிமம் பெற்ற 2,125...