×

ஆவடி எஸ்.ஏ.பி காலனியில் நோய் பரப்பும் கழிவுநீர் கால்வாய்: அதிகாரிகள் அலட்சியம்

ஆவடி: ஆவடி, சி.டி.எச் சாலை, எஸ்.ஏ.பி காலனி அருகில் திறந்துகிடக்கும் ராட்சத கழிவுநீர் கால்வாயால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஆவடி, சி.டி.எச் சாலையில் எஸ்.ஏ.பி காலனி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த காலனி நுழைவாயில் வழியாக ராட்சத கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை கடந்து எஸ்.ஏ.பி காலனிக்கு சென்று வர வேண்டும். மேலும், இந்த கால்வாய் ஓரமாக உள்ள சி.டி.எச் சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவடி, சி.டி.எச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இச்சாலை உள்ள எஸ்.ஏ.பி காலனி அருகில் கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கிறது. மேலும், இந்த கால்வாய் பல அடி நீளத்துக்கும் உடைந்து திறந்து கிடக்கிறது. இதோடு மட்டுமல்லாமல், இந்த கால்வாயில் ஆழம் அதிகம். கால்வாயை ஒட்டிய பகுதிகளில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து இருக்கும்.

இதனால், சில நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கால்வாய்க்குள் தவறி விழுந்து கடும் அவதிப்படுகின்றனர். கால்வாய்க்குள் கொட்டப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களால் மக்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மர்மக்காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களைப் பரப்புகிறது. இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பலனில்லை. எனவே, இனி மேலாவது ஆவடி, சி.டி.எச் சாலை, எஸ்.ஏ.பி காலனி அருகிலுள்ள ராட்சத கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Avadi SAP Colony ,
× RELATED ஆவடி எஸ்.ஏ.பி காலனியில் நோய் பரப்பும்...