நூல் விலை உயர்வால் அழிவின் விளிம்பில் கைத்தறி தொழில்

உடுமலை, மார்ச் 18: அழிவின் விளிம்பில் கைத்தறி தொழில் உள்ள நிலையில் நூல் விலை உயர்வால் கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டணத்தில் கைத்தறி நெசவு தொழில் நடந்து வருகிறது. இத்தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். சொந்தமாக தறி நெய்யும் நெசவாளர்களும் உள்ளனர். கூலிக்கு நூல் எடுத்து நெசவு செய்யும் நெசவாளர்களும் உள்ளனர். பெருமளவில் முதலீடு செய்து அதிகளவில் கைத்தறி கூலியாட்களை வைத்திருக்கும் மாஸ்டர் வீவர் உரிமையாளர்களுக்கு பெரும்பாலும் சிக்கல் இல்லை. ஆனால் கூலிக்கு நூல் எடுத்து தானே சொந்தமாக நெசவு செய்து வரும் கைத்தறி நெசவாளர்கள் குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளது.

திறனில்லாத, நெசவாளர்களிடம் கூலிக்கு பாவு நூலும், ஊடை நூலும் கொடுத்து வாங்கி வியாபாரம் செய்ய ஆட்களே இல்லை. இந்த நிலையில் வரி விகிதம் மற்றும் பெட்ரோல் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் நூல் விலையிலும் நாளுக்கு நாள் மாறுபாடு காணப்படுகிறது. மேலும் நூலின் விலையும், பட்டின் விலையும் ஏறுமுகமாக இருந்து வருகிறது.  இதனால் சாதாரண ஏழை கைத்தறி செநவாளர்கள் தொழில் நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். நூல் விலை உயர்ந்து அதை கொள்முதல் செய்து கைத்தறி துணிகளை தயாரித்து சந்தைப்படுத்தும்போது விலை அதிகரித்து விடுகிறது. இதனால் சந்தைப்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல் உருவாகிறது. கைத்தறி பொருட்களுக்கு நிலையான விலை இல்லாமல் விலை மிகவும் வேறுபட்டும், மாறுபட்டும் உள்ளது. இதனால் கைத்தறி துணிகளின் விற்பனை சரிவைச் சந்தித்து தொழில் நஷ்டத்தை நோக்கி செல்வதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.  எனவே தமிழக அரசு விளிம்பு நிலையில் இருக்கும் கைத்தறி நெசவாளர்களின் குடும்ப வாழ்வினை காப்பாற்ற கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைத்தறி தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: