×

சேலம் மாவட்டத்தில் விதிமுறையை மீறி விற்ற 7,710 மாஸ்க் பறிமுதல்

சேலம், மார்ச் 18: சேலம் மாவட்டத்தில் தொழிலாளர் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட 7,710 முகக்கவசங்கள் (மாஸ்க்) பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளில், முகக்கவசம் மற்றும் கை சுத்தம் செய்யும் திரவம் ஆகியவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், அப்பொருட்களில் அதிகபட்ச சில்லரை விலை, தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு மாதம், தேதி போன்ற விவரங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக தொழிலாளர் துறைக்கு புகார்கள் சென்றன.

இதனையடுத்து, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை கூடுதல் முதன்மை செயலாளரும், சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான நசிமுதீன், தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் ஆகியோரது உத்தரவின் பேரிலும், சேலம் தொழிலாளர் இணை ஆணையர் தங்கவேல் அறிவுரையின் படியும், நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கோட்டீஸ்வரி தலைமையில் நடந்த இந்த ஆய்வின்போது,  மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 8 நிறுவனங்களில் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட 7,710 முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், சம்பந்தப்பட்ட 8 நிறுவன உரிமையாளர்கள் மீது பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, முரண்பாடுகள் உள்ள நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆணையர் கோட்டீஸ்வரி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, துணை ஆய்வர்கள் சீனிவாசன், சந்திரன், உதவி ஆய்வர்கள் சாந்தி, ஞானசேகரன், சிவக்குமார், அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Salem District ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!