×

‘17 பி’ நடவடிக்கையை கைவிடக்கோரி விரைவில் முதல்வரை சந்திக்க முடிவு

ஈரோடு, மார்ச் 18: ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ‘17 பி’ நடவடிக்கையை கைவிடக்கோரி விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராடுகிறோம். கடந்த 2016ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா புதிய பென்சன் திட்டத்தை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார். ஆனால், இப்போதுள்ள அரசு அதில் முனைப்பு காட்டவில்லை.
தமிழகத்தில் அனைத்து அரசுத்துறையிலும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடம் நிரப்பப்படாததால் பணிச்சுமை அதிகரித்துள்ளது.

இதை விரைவில் சரி செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் பிரச்னை, சம்பள கமிஷன் பிரச்னைக்காக நியமிக்கப்பட்ட சித்திக் கமிட்டி, ஸ்ரீதர் கமிட்டி பரிந்துரைகளை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். கடந்தாண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது 5,600 பேருக்கு ‘17 பி’ (ஒழுங்கு நடவடிக்கை) நோட்டீஸ் வழங்கப்பட்டு, நடவடிக்கையில் உள்ளது. இதை வாபஸ் பெறக்கோரியும், இடம் மாற்றம் செய்யப்பட்டவர்களை முந்தைய பணியிடத்தில் நியமிக்ககோரியும் போராடி வருகிறோம்.  இதுதொடர்பாக விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளோம். இவ்வாறு ஜனார்த்தனன் கூறினார்.

Tags : Chief Minister ,
× RELATED வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை