×

கொரோனா வைரஸ் எதிரொலி ஆழியார் அணை சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடியது

பொள்ளாச்சி, மார்ச் 18:   கொரோனா வைரஸ் எதிரொலியால் ஆழியார் அணைப்பகுதி சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. பொள்ளாச்சியை அடுத்த சுற்றுலா பகுதிகளில் ஒன்றான ஆழியாருக்கு, உள்ளூர் சுற்று வட்டார பகுதியில் இருந்தும் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், பழனி, கேரளா உள்பட வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆழியாருக்கு வரும் பயணிகள், அணையின் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டு, பூங்காவில் குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர்.

மேலும், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். இந்த மாதம் துவக்கம் வரை சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்களில் பலரும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இந் நிலையில், கொரோனா வைரஸ் எதிரொலியாக நேற்று முன்தினம் முதல், ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. அணையின் மேல் பகுதியிலும் பயணிகள் செல்ல தடை செய்யப்பட்டது. நேற்று ஆழியார் அணை பகுதிக்கு வந்த ஒரு சில சுற்றுலா பயணிகளையும், பொதுப்பணித்துறையினர் திருப்பி அனுப்பினர். இதனால், அணைப்பகுதி மற்றும் பூங்கா பகுதியில் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags : Aliyar Dam ,
× RELATED வால்பாறைக்கு விதிமீறி வருகை தரும் சுற்றுலா பயணிகள்