×

ஜோதிநகர் பூங்காவில் காய்கறி அறுவடை பணி தீவிரம்

பொள்ளாச்சி, மார்ச் 18: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட ஜோதிநகர் பூங்காவில், மக்கும் குப்பையை உரமாக்கி சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொள்ளாச்சி நகராட்சி வார்டுக்குட்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக வளாக பகுதிகளில், துப்புரவு பணியாளர்கள் சேகரிக்கும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் நல்லூரில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்நிலையில், அந்தந்த வார்டு பகுதிகளில் சேரிக்கப்படும் மக்கும் குப்பைகளை ஒரே இடத்தில் போட்டு அதனை உரமாக்கும் நடவடிக்கையில் நகர்நல அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதில், நகராட்சிக்குட்பட்ட ஜோதிநகரில் பூங்காவிற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் சுமார் ஒரு ஏக்கரில், மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரித்து அதில், நிலக்கடலை, வெண்டை, தட்டைபயிர், கத்தரி, தக்காளி, வெங்காயம்  உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டன. அவை நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. இதையடுத்து நேற்று, நிலக்கடலை, வெங்காயம் உள்ளிட்டவை அறுவடை பணி நடைபெற்றது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,`பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட சில இடங்களில், துப்பரவு பணியாளர்கள் மூலம் சேரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை ஒரே இடத்தில் போட்டு அதனை உரமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், அந்த உரம்  மூலம் பல்வேறு காய்கறி மற்றும் கீரை வகைகள் உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது. அந்தந்த வார்டு பகுதியில் வசிப்போர், தங்கள் வீடுகளிலும், இதுபோன்று மக்கும் குப்பையை உரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், இயற்கையான ரசாயனம் இல்லாத உரங்கள் கிடைப்பதுடன், அதனை கொண்டு தங்கள் வீட்டு பகுதியிலேயே மண்ணுக்கேற்ற பல்வேறு காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். மேலும், துப்புரவு பணியாளர்கள் அந்தந்த பகுதிக்கு வந்து குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி மிச்சமாகும்’ என்றனர்.

Tags :
× RELATED இருசக்கர வாகன நம்பரை மறைப்பதால்...