×

அன்னூர் அருகே கள்ளத்தனமாக மது விற்ற இடத்தை மக்கள் சூறை

அன்னூர், மார்ச் 18: கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள கரியம்பாளையத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை கடந்த 2015ல் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பொன்னேகவுண்டன்புதூர் பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இந் நிலையில், கரியாம்பாளையத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்த அதே இடத்தில், கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் மதுவை, கள்ளச்சந்தையில் வாங்கி 24 மணி நேரமும் விற்பனை செய்து வந்தனர். இதனால், கிருஷ்ணகவுண்டன்புதூர்- காந்திநகர் பகுதியில் வசிக்கும் மக்கள், மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த இடத்தை மாற்றக் கோரியும் கலெக்டர், அன்னூர் தாசில்தார் மற்றும் காவல்துறையினருக்கு பலமுறை புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால் ஆவேசமடைந்த மக்கள் நேற்று மாலை, கள்ளத்தனமாக மது விற்றுக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்து, அங்கிருந்த மதுபாட்டில்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கோரியும், உள்ளே மது குடித்தவர்களை வெளியெற்றக் கோரியும் கடைக்குள் இருந்த மேஜைகளை, நாற்காலிகளை வெளியே தூக்கி எறிந்தனர். பின்னர், ரேஷன் கடையில் சிறப்பு திட்டத்தில் விநியோகிக்கப்படும் சமையல் எண்ணெய்யையும் பறிமுதல் செய்து  முற்றுகையில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னூர் போலீசார், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும், இங்கு இனி மது விற்பனைக்கு அனுமதி அளிக்க மாட்டோம். விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Annur ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...