×

கொரோனா வைரஸ் எதிரொலியாக ரயில் நிலையத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு

ஈரோடு, மார்ச் 18:  கொரோனா வைரஸ் எதிரொலியாக ஈரோடு ரயில் நிலையத்தில் நேற்று அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  கொரோனா வைரஸ் நோய் சீனாவில் தொடங்கி பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்த நோய் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் கைகளை கழுவதற்காக தனியாக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் கிருமி நாசினி வைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து ஈரோடு ரயில் நிலையத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டனர். தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட்டனர்.

 ஈரோடு மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டுகள், கோயில்கள், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் பொதுமக்கள் முககசவம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வெளியிடங்களுக்கு செல்லும்போது கைகளை கழுவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வாரச்சந்தை, மாட்டுசந்தை போன்ற சந்தைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள மருத்துவ குழுவினர் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா வைரஸ் நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ரயில் நிலையத்தில் அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்த பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ரயில்களிலும் கிருமி நாசினியை பணியாளர்கள் தெளித்து வருகிறார்கள். மேலும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பாக உஷார்படுத்தப்பட்டு வருகிறது. என தெரிவித்தனர்.

Tags : team ,train station ,
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...