×

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூடல்

சத்தியமங்கலம்,  மார்ச் 18: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதிலும் உள்ள  பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக  முதல்வர் உத்தரவிட்டார். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை  சார்பில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம்  இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்துறையில் பணிபுரியும்  இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அரசுப்பணியாளர்கள் பவானிசாகர்  அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் 41 நாள் பயிற்சி பெற வேண்டும் என்பது  விதிமுறை. இந்த பயிற்சி பெற்றால்தான் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள்  கிடைக்கும்.

 இந்நிலையில் தற்போது பயிற்சி பெற்று வரும் 700  அரசுப்பணியாளர்களுக்கான முதல் நாள் பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியது.  நேற்று 2ம் நாள் பயிற்சி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ்  அச்சுறுத்தல் உள்ளதால், பயிற்சி நிலையத்தை மார்ச் 31ம் தேதி வரை மூடுமாறு  சுற்றறிக்கை வரப்பெற்றதையடுத்து நேற்று முதல் அரசு அலுவலர் பயிற்சி  நிலையம் மூடப்படுவதாக முதல்வர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 700 அரசுப்பணியாளர்கள் தங்கள் ஊருக்கு  செல்வதற்காக பயிற்சி நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags : Closure ,Bhavani Sagar Government Training Center ,
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...