×

அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம் அமைக்க ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கீடு

ஈரோடு, மார்ச் 18: அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம் அமைக்க ரூ.44 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளி மாணவ, மாணவியர்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் ‘சமக்ரா சிக்ஷா’ சார்பில் ஒவ்வொரு பள்ளியிலும் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் அமைக்கப்பட்டு வருகிறது. தொடக்க, நகரவை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வசதியாக ஒவ்வொரு பள்ளிக்கும் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கான நிதி தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழல் அமைப்பு சார்ந்த கருத்துக்களை கற்பித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க  விழிப்புணர்வு ஏற்படுத்தி பசுமையான சூழலை உருவாக்கும் வகையில் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இம்மன்றங்களுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தொடக்கப்பள்ளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், நடுநிலைப்பள்ளிகள் ரூ.15 ஆயிரம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 178 பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் மரம் நடுதல், பசுமையை பாதுகாத்தல், உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக நடப்பாண்டில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் மன்றங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags : government schools ,Environmental Council ,
× RELATED அரசு பள்ளிகளை தொடர்ந்து தனியார்...