×

தொகரப்பள்ளி காப்புக்காட்டில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வனத்துறை நடவடிக்கை

கிருஷ்ணகிரி, மார்ச் 18: கிருஷ்ணகிரி அடுத்த தொகரப்பள்ளி மற்றும் வரட்டனப்பள்ளி காப்புக்காடுகளில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டியில், டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக வறண்டு வருகிறது. வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால், வனத்தில் இருந்து யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கிறது. இதனால் மான் உள்ளிட்ட விலங்குகள் நாய்களால் கடிபட்டும், கிணற்றில் தவறி விழுந்தும், சாலைகளை கடக்கும் போது உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கிறது. இதனை தடுக்கும் வகையில் காப்புக்காடுகளில் உள்ள தொட்டிகள் மற்றும் சுனைகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொகரப்பளளி காப்புக்காட்டில் உள்ள தொட்டி மற்றும் சுனையில் தண்ணீர் நிரப்பும் பணியை, கிருஷ்ணகிரி வனச்சரகர் சக்திவேல் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் தொகரப்பள்ளி, நந்திபண்டா, வரட்டனப்பள்ளி, நொச்சிப்பட்டி, நாய்க்கனூர் காப்புகாடுகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை வெயிலின் தாக்கம், தற்போதே தொடங்கிவிட்டது. இதனால், வனவிலங்கள் வெளியேறுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 நாட்களுக்கு ஒரு முறை டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியை தொடங்கி உள்ளோம். வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க தொடங்கினால் கூடுதலாக 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடப்படும். வனவிலங்குகள் வெளியேறாமல் தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார். அப்போது, வனவர் பிரவின்ராஜ், அண்ணாதுரை, ஹேமலதா, வனக்காப்பாளர் கங்கைஅமரன், ரகமத்துல்லா, சிவக்குமார், வனகாவலர் கணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Forest Department ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...