×

கொரோனா பீதியால் பருவம் தவறிய மாங்காய் விலை சரிவு

போச்சம்பள்ளி, மார்ச் 18: போச்சம்பள்ளியில் சீசன் துவங்கிய நிலையிலேயே பருவம் தவறிய மாங்காய் விலை சரிந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி தாலுகா மா விளைச்சலில் 2ம் இடத்தில் உள்ளது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மா சாகுபடிக்கு சாதமாக உள்ளதால்,  அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் ரகங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி பகுதியில் தோத்தாபுரி 60 சதவீதமும், செந்தூரா மற்றும் நீலம் 30 சதவீதமும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்த நிலையில், உரிய விலை கிடைக்காததால் மா அறுவடை பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.

இதையடுத்து மா விவசாயிகள் போச்சம்பள்ளி, பெரியகரடியூர், ஓலைப்பட்டி, சாலமரத்துப்பட்டி, தாதம்பட்டி, ஒட்டதெரு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 20 ஏக்கர் பரப்பளவில் பருவம் தவறிய மா விளைச்சலை உருவாக்கினர். தற்போது பருவம் தவறிய மா சீசன் துவங்கி, அறுவடைக்கு தயாராக உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் பருவ தவறிய மாங்காயை வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பினர். இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்தது.  
இந்நிலையில், தற்போது கொரோனா பீதியால் வெளிமாநில வியாபாரிகள் பருவம் தவறிய மாங்காயை கொள்முதல் செய்ய வரவில்லை.

இதனால், அறுவடை  துவங்கிய நேரத்தில் விலையும் கடுமையாக சரிந்ததால், மரங்களிலிருந்து மாங்காயை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர். கடந்தாண்டு பருவம் தவறிய காதர் ரக மாங்காய் கிலோ ₹300க்கும், பெங்களூரா ₹60க்கும் விற்பனையானது. ஒருசில விவசாயிகள் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது காதர் ரகம் 150க்கும், பெங்களூரா ₹30க்கும் வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. இதனால் பருவம் தவறிய மா சாகுபடி செய்த விவசாயிகள் பெருத்த நஷ்டமடைந்துள்ளனர்.

Tags : corona panic ,
× RELATED கொரோனா: பீதி கிளப்பும் புது வைரஸ்