×

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை

தர்மபுரி, மார்ச் 18: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையையொட்டி, தர்மபுரி நகராட்சியில் தனிக்குழுகள் அமைத்து, 33 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சி ஆணையர் சித்ரா மற்றும் நகராட்சி ஊழியர்கள் நகர பஸ் ஸ்டாண்டிற்கு நேற்று வந்தனர். கொரோன வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அம்மா உணவகம் முன், கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அம்மா உணவகத்திற்குள் சென்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சாப்பிட வந்த பொதுமக்களுக்கு, கிருமி நாசினி தெளித்து கைகளை சுத்தம் செய்த பின்னரே சாப்பிட உள்ள செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த டவுன் பஸ்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பஸ்சின் படிக்கட்டு, கைபிடிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. புறநகர் பஸ் ஸ்டாண்டில் உள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கோவிந்தராஜன், சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து நகராட்சி ஆணையர் சித்ரா கூறுகையில், தர்மபுரி மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில், நகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நகராட்சி 33 வார்டுகளிலும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். 10 ஆயிரம் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் மக்கள் கூடும் இடங்களில் வழங்கவும், முக்கிய இடங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு, 3 ஆயிரம் கிலோ பிளிச்சிங் பவுடர் தயார் நிலையில் உள்ளது.

மேலும் 2 ஆயிரம் கிலோ பிளிச்சிங் பவுடர் வாங்க உள்ளோம். 2 ஆயிரம் மாஸ்க் வாங்க உள்ளோம். கிருமிநாசினி தட்டுப்பாடு உள்ளதால், நாங்களே கிருமிநாசினி தயார் செய்து, மக்களுக்கு கைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். கிருமிநாசினி தெளிப்பு பணிக்கு கூடுதல் ஆட்கள் நியமித்துள்ளோம். அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, கொரோனா வைரஸ் தடுப்பு உடைகள் வழங்கவும் உள்ளோம். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தர்மபுரி நகரத்தில் உள்ள 2 பூங்கா, 5 தியேட்டர்கள் மூடப்பட்டது.

நகராட்சி 33 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று, கொரோனா வைரஸ் கிருமிநாசினி தெளிக்க தினசரி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய, விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக ரப்பீடு ரெஸ்பான்ஸ் குழு  (உடனுக்குடன் பணியாற்றும் குழு) என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஒருவார்டுக்கு 2பேர் வீதம், 66பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடுகளில் சளி, காய்ச்சலால் பாதிப்பால் உள்ளனரா என்று கண்காணித்து சிகிச்சைக்கு நடவடிக்கையும், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிப்பார்கள். இந்த குழு விரைவாக செயல்படுவார்கள்.

மக்கள் தங்கள் வீடுகளையும், தானும் சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். வெளிமாநிலத்திற்கோ, வெளி மாவட்டத்திற்கு செல்லுவது தவிர்க்க வேண்டும். சளி, காய்ச்சல் வந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். சளி, இருமல் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தினமும் 10 முறை கைகளை சோப்பு போட்டு, நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கை குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல் உள்ளவர்களை, வீட்டில் தனி அறையில் வைத்து கண்காணிக்க வேண்டும். சளி காய்ச்சல் வந்தால் உடனே சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

Tags : city ,spread ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்