×

வாகன சோதனை என்ற பெயரில் போலீசார் அடாவடி வசூல் வாகன ஓட்டிகள் புகார்

சிவகங்கை, மார்ச் 17: சிவகங்கை மாவட்டத்தில் வாகன சோதனை என்ற பெயரில் போலீசார் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் முழுவதும் காலை முதல் மதியம் வரையும், மாலை முதல் இரவு வரையும் போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்கின்றனர். மாவட்டம் முழுவதும் டூவீலரில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள், ஆவணங்கள், லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டிகளிடம் அபராதம் என வசூல் செய்கின்றனர். இந்தப்பணத்திற்கு முற்றிலும் ரசீது வழங்காமல் இருப்பது, ரசீதில் தொகையை குறிப்பிடாமல் இருப்பது, அல்லது கூடுதல் தொகையை பெற்றுக்கொண்டு குறைவான தொகைக்கு ரசீது வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.

இது குறித்து கேள்வி எழுப்புபவர்களின் வாகனங்களை நீண்ட நேரம் விடுவிக்காமல் காத்திருக்க வைப்பது, லைசென்சை எடுத்துக்கொண்டு ஸ்டேசனில் வந்து வாங்கிக்கொள் என கூறுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் மாவட்டம் முழுவதும் பல லட்ச ரூபாய் வசூல் வேட்டை நடந்து வருகிறது. இதனால், டூவீலர் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் கடும் அவதிடைந்து வருகின்றனர். மாவட்டம் கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு பல்வேறு விதிமுறைகளை கூறி அபராதம் வசூல் செய்கின்றனர். சிறிய வகை லோடு வேன்களில் ஆடு, மாடுகள், பொருட்கள் சில நேரங்களில் பஸ் வசதியே இல்லாத கிராமங்களுக்கு கோயில் நிகழ்ச்சி, இறப்பு உள்ளிட்டவைகளுக்கு ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர்.

அவர்களை விரட்டிப்பிடித்து பணம் வசூல் செய்வதில் குறியாக உள்ளனர். நகரின் தெருக்களில் ஹெல்மெட் இல்லாமல் போவது, மொபைல் பயன்படுத்தினால் விரட்டிப்பிடித்து வசூல் செய்கின்றனர். வாகன ஓட்டிகளை சமூக விரோதிகளை நடத்துவது போல் ஒருமையில் பேசி மரியாதை குறைவாக நடத்துகின்றனர். குறிப்பாக சிவகங்கை நகர் போலீசின் அத்துமீறி செயல்படுகின்றனர். டூவீலர் வாகனங்களில் நீண்ட தூரம் செல்பவர்களிடம் ஹெல்மெட் அணிய வலியுறுத்த வேண்டும். அதைவிடுத்து கிராமங்கள், நகரில் உள்ள தெருக்களுக்குள் வாகனம் ஓட்டுபவர்களிடம் இதுபோல் செய்வது தேவையற்றது. இந்த நடவடிக்கை போலீசாருக்கு பண வசூல் செய்ய மட்டுமே உதவும். நகர்ப்பகுதிக்குள் வாகன சோதணை செய்வது பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தும்’ என்றனர்.

Tags : vehicle inspection ,motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...