×

மானாமதுரை புது பஸ்ஸ்டாண்டில் குடிநீர் இன்றி பயணிகள் அவதி

மானாமதுரை, மார்ச் 17: மானாமதுரை புது பஸ்ஸ்டாண்டில் குடிநீர் இன்றி பயணிகள் தாகத்தால் தவிக்கின்றனர். பஸ்ஸ்டாண்டு அருகே செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரையில் புதுபஸ்ஸ்டாண்டு நான்குவழிச்சாலையில் அமைந்துள்ளது. தினமும் மதுரை-ராமேஸ்வரம் மார்க்கமாக இயக்கப்படும் 300க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இங்கு வந்து பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்கின்றன. அனைத்து பஸ்களுக்கும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதன்மூலம் பேரூராட்சிக்கு தினமும் கணிசமான தொகை வருமானமாக கிடைத்து வருகிறது. மேலும் இங்குள்ள கடைகளின் வாடகை மூலமும் வருமானம் கிடைக்கிறது.

மானாமதுரை நகர் மற்றும் சுற்றியுள்ள 150 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் மானாமதுரை பஸ்ஸ்டாண்டுக்கு வந்து தாங்கள் செல்ல வேண்டிய வெளியூர்களுக்கு சென்று திரும்புகின்றனர். இந்த பஸ்ஸ்டாண்டு செயல்படத் தொடங்கி 15 ஆண்டுகளாகியும் பயணிகளுக்கு நிரந்தரமாக குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.

பஸ்ஸ்டாண்டின் மேற்குப்பகுதியில் போர்வெல் அமைத்து அதிலிருந்து குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தண்ணீர் உவர்ப்பு தன்மையுடன் இருப்பதால் பயணிகளால் குடிக்க முடியவில்லை. பஸ்ஸ்டாண்டில் கடைகள் நடத்துவோர் இந்த தொட்டியிலிருந்துதான் தண்ணீர் எடுத்துச் சென்று பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர இரவு நேரங்களில் பஸ்களை கழுவி சுத்தம் செய்வதற்கும், பேருந்து ஊழியர்கள், கடை ஊழியர்கள் குளிப்பதற்கும் துணிகளை துவைப்பதற்குமே இந்த குடிநீர்தொட்டி தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் தொட்டி அமைந்துள்ள பகுதியை பொதுமக்கள் முழுமையாக திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருவதால் அதன் அருகில் சென்றாலே மூக்கைப்பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.

குடிநீர் கிடைக்காததால் பயணிகள் கடைகளில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்களை பணம் கொடுத்து வாங்கி தாகத்தை தீர்த்துக்கொள்கின்றனர். தற்போது கோடைவெயில் கொளுத்தி மக்களை வறுத்தெடுத்து வரும் நிலையில், பயணிகளுக்கு குடிநீர் தேவை அதிகமாக உள்ளது. ஏழை பயணிகள் விலைகொடுத்து குடிநீர் பாட்டில்கள் வாங்கி குடிக்க முடியாது என்பதால் வேறுவழியின்றி கிராமப்புற பயணிகள் சுகாதாரமற்ற முறையில் சீர்கேட்டுடன் காணப்படும் சின்டெக்ஸ் தொட்டி தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக்கொள்கின்றனர். பஸ்ஸ்டாண்டில் பயணிகளின் தாகத்தை தீர்க்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,Manamadurai New Bus Stand ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை