×

இளையான்குடி அருகே வைகை தண்ணீர் வந்து சேரும் வரத்து கால்வாயை உடைத்து மண் கொள்ளை அதிகாரிகள் உடந்தை என பொதுமக்கள் புகார்

இளையான்குடி, மார்ச் 17:  இளையான்குடி அருகே அதிகாரிகளின் உடந்தையுடன், கால்வாயை உடைத்து மண் கொள்ளை நடந்தது என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், பார்த்திபனூர் அருகே வைகை ஆற்றின் குறுக்கே இடது பிரதான மதகு அணையில் சுமார் 30 கிமீ தூரம் வரை சாலைக்கிராமம் வரத்துகால்வாய் செல்கிறது. வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும்போது இந்த கால்வாய் வழியாகத்தான் தண்ணீர் வந்தடையும். அவ்வாறு வரும் தண்ணீர் செங்கோட்டை, தெ.புதுக்கோட்டை, பிராமணக்குறிச்சி, முள்ளியரேந்தல், முனைவென்றி, திருவுடையார்புரம், சிறுபாலை, புலியூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து  கடைசியாக சாலைக்கிராமம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வந்தடையும்.

இந்த கால்வாயை நம்பி பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளது. பல விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த கால்வாய், வாணிவிலக்கிற்கும், கபேரியல் பட்டிணத்திற்கும் இடையில் கரையை உடைத்து, மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக அறங்கேறிவரும் இந்த மண் கொள்ளையில், அதிகாரிகளின் உடந்தையுடன் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் வருவாய்த்துறை, போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் அப்பகுதி மக்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

சாலைக்கிராமம் கால்வாயை உடைத்து, நடந்த இந்த மண் கொள்ளையால், கால்வாய்க்கு  தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கால்வாயை நம்பியுள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழியும் நிலையும் உள்ளது. மேலும் மேல்வரத்து வரும் மழைநீர் இந்த கால்வாய் உடைப்பால் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. மண் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சேதமடைந்த சாலைக்கிராமம் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உரிய  உத்தரவிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து  அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த கால்வாயை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது. தண்ணீர் வரும் வரத்துகால்வாயை உடைத்து மண்னை கொள்ளைடித்துள்ளனர். இதுவரை நடவடிக்கை இல்லை. மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : public ,mud burglary officials ,Ilangudi ,Vaigai ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...