×

கல்லல் அருகே கண்மாய் தடுப்பு அணை அமைப்பதில் முறைகேடு விவசாயிகள் சங்கம் புகார்

சிவகங்கை, மார்ச் 17:  கல்லல் அருகே தளக்காவூர் ஊராட்சியில் அதலைக்கண்மாய் வரத்து கால்வாய் உடன் தடுப்பு அணை அமைத்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கல்லல் ஒன்றியம் தளக்காவூர் ஊராட்சியில் அதலைக்கண்மாய் தடுப்பு அணை தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ளதாக அடிக்கல் வைத்துள்ளனர். அதில் வேலை அடையாள அட்டை எண் என்ற தகவல் மட்டுமே உள்ளது. எவ்வளவு மதிப்பீடு, வேலை துவங்கப்பட்ட நாள், வேலை முடிவுற்ற நாள், உழைப்பு மற்றும் பொருட்கள் தொகுதி, வேலையின் அளவு, தினசரி ஊதிய விகிதம் உள்பட எந்த விபரமும் இல்லை.

நூறுநாள் வேலை திட்டத்தில் குறிப்பிட்ட நாட்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வேலை பார்த்ததாக கூறி அத்திட்டத்தில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் தனியார் காண்ட்ராக்டர் மூலம் தரம் குறைவாக வேலை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்களிலேயே கட்டப்பட்ட தடுப்பணை சுவர் இடிந்து காணப்படுகிறது. இடிந்து விழுந்த பகுதியில் சிமெண்டால் கட்டப்பட்ட கலவையில் மணலே அதிகமாக உள்ளது. இதனால் இந்த அணை ஒரு மழைக்கே தாங்குவது கடினம் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கூறியதாவது: நூறுநாள் வேலை திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.12 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே சமூக தணிக்கை மூலம் கண்டறியப்பட்டது. அதில் இதுபோன்ற அணைகள், கண்மாய்களுக்கு கால்வாய் அமைத்தல் போன்றவைகள் மூலமே அதிகமாக முறைகேடு செய்துள்ளனர். அதலை கண்மாய் தடுப்பணை நூறுநாள் வேலை திட்டம் மூலம் கட்டப்பட்டது என்றால் எத்தனை தொழிலாளர்கள், எத்தனை நாள் வேலை செய்தனர். எப்போது தொடங்கி எப்போது முடித்தனர் என எந்த விபரமும் இல்லை. அது குறித்து கேட்டால் விபரம் தர மறுக்கின்றனர். தனியார் காண்ட்ராக்டர் மூலம் பெயரளவிற்கு தரமே இல்லாமல் கட்டியதால் காலால் தள்ளினாலே சுவர் இடிந்து விழும் வகையில் உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Farmers' Association ,cemetery ,barrier ,
× RELATED மயிலாடும்பாறை அருகே பாதியில்...