×

திருமங்கலத்தில் நான்கு வழிச்சாலையில் இடிந்து கிடக்கும் பாலம்

திருமங்கலம், மார்ச் 17: திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் முழுமையாக இடிந்துள்ளது. இந்நிலையில் வாகனங்கள் கவிழாமல் இருக்க போலீசார் பேரிகார்டுகளை வைத்துள்ளனர். மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் நான்கு வழிச்சாலை திருமங்கலம் நகரின் புறவழிச்சாலையாக அமைந்துள்ளது. இதில் குதிரைசாரி குளம் மற்றும் மறவன்குளம் ஆகிய பகுதிகளில் கண்மாய்களின் மேல் நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் வளைவில் சாலையின் நடுவே ஒரு சிறிய பாலம் அமைந்துள்ளது.

பக்கவாட்டுச் சுவர் இல்லாமல் அமைக்கப்பட்ட இந்த சிறிய பாலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5க்கும் மேற்பட்ேடார் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இந்த சிறிய பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டுச் சுவரினை எழுப்பியது. இருப்பினும் இரவில் மின்னல் வேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பக்கவாட்டு சுவரில் மோதியதில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு பகுதி இடிந்து போய் காட்சி தந்தது.

இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு இரவில் மற்பொரு வாகனமும் இந்த திறந்த வெளி சிறிய பாலத்தின் மோதியதில் பக்கவாட்டுச் சுவர் மற்றொருபுறமும் இடிந்து விழுந்தது. இதுகுறித்து வாகனத்தில் செல்வோர் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மற்றும் திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து திருமங்கலம் போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகளை பக்கவாட்டு சுவர்கள் இருந்த இருபுறமும் வைத்து தற்காலிகமாக விபத்தினை தவிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து வாகனோட்டிகள் கூறுகையில், ``போலீசார் வைத்துள்ள பேரிகார்டு இரவு வேளையில் தெரியாது. வேகத்தில் வரும் வாகனங்கள் பேரிகார்டுகளில் மோதி பின்னர் பாலத்தில் கவிழ்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த சிறிய பாலத்தினை மூடும் வகையில் நான்கு புறமும் சுவர்களை எழுப்புதல் அவசியம்’’ என்றனர்.

Tags : bridge ,Thirumangalam ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...