×

பொதுப்பணித்துறை அலுவலகத்தை எம்எல்ஏ தலைமையில் முற்றுகை

புதுச்சேரி,  மார்ச் 17: புதுச்சேரி உப்பளம் தொகுதியில் சுத்தமான குடிநீர்  விநியோகிக்கப்பட வில்லை எனவும், வடிகால் வாய்க்கால்களை சுத்தம் செய்ய  வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏவிடம் நீண்டநாட்களாக  வலியுறுத்தி வந்தனர். இருப்பினும் அவர்களின் கோரிக்கையை பொதுப்பணித்துறை  நிர்வாகம் இதுவரை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் அதிமுக சட்டமன்ற  கட்சித் தலைவரான அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் அப்பகுதி மக்கள் 70க்கும்  மேற்பட்டோர் நேற்று திடீரென பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம்  முன்பு திரண்டனர். பின்னர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அங்குள்ள  அலுவலகத்தை திடீரென இழுத்து மூடி  முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் கிடைத்து விரைந்து வந்த ஒதியஞ்சாலை  போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ மற்றும் பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அதை நிராகரித்த உப்பளம் தொகுதி  மக்கள் முற்றுகையை தொடர்ந்த நிலையில் அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : MLA ,siege ,
× RELATED மக்கள் சாரைசாரையாக வந்து இந்தியா...