×

சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்தால் நடவடிக்கை

விழுப்புரம், மார்ச் 17: விழுப்புரம் மாவட்டத்தில் பனைமரங்களில் பதனீர்மட்டும் இறக்கி விற்பனை செய்துகொள்ளலாம், சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று எஸ்பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு, அவர்களின் மெச்சத்தகு பணியை பாராட்டி ஊக்கப்பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. எஸ்பி ஜெயக்குமார் தலைமை தாங்கி வழங்கினார். அப்போது கூடுதல் எஸ்பி சரவணக்குமார், மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி இளங்கோவன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்விநாயகம், ரேணுகாதேவி, விஷ்ணுபிரியா மற்றும் எஸ்ஐக்கள், சிறப்பு எஸ்ஐ, ஏட்டு, போலீசார் உள்ளிட்ட 30 பேருக்கு ஊக்கப்பரிசு, சான்றிதழ்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மரக்காணத்தில் வீட்டில் பதுக்கிவைத்து மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே இரண்டு போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்ஸ்பெக்டர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக பனை மரத்தில் கள் இறக்குவதாக வந்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளோம். கடந்த ஜனவரி முதல் 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைப்படி பதனீர் இறக்கி விற்பனை செய்து கொள்ளலாம். காதி கிராப்ட் உதவி இயக்குநர் தான் இதற்கு அனுமதியும் வழங்குகிறார். காவல்துறையில் அனுமதி வழங்குவது கிடையாது.

மேலும், பனை வெல்லத்தை காய்ச்சியும் விற்பனை செய்து கொள்ளலாம். தற்போது சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து வரும்நிலையில் பனை வெல்லத்தின் தேவை அதிகமாக உள்ளது. கிலோ ரூ.300க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. எனவே, பதனீர், பனை வெல்லம் காய்ச்சுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைபொருள் கலப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பதில் சொல்வது. தமிழக அரசு, கள் இறக்கவும் அனுமதி வழங்கவில்லை. தொடர்ந்து இதனை காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை: மாவட்ட வன அலுவலர் பேட்டி