×

கடலூர் விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள தடை

கடலூர், மார்ச் 17:   கடலூரில் கொரோனா எச்சரிக்கை காரணமாக விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட எல்லைக்குள் நுழையும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவது நேற்று முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில், கடலூரிலுள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த அரசுப்பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேதி அறிவிக்கப்படாமல், ஒத்தி வைக்கப்படுவதாக ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலஅலுவலர் சிவா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு மைதானத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மூடுவதற்கு பேரிடர் மேலாண்மைத் துறையிடமிருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால், விளையாட்டு அரங்கில் நடைப்பயிற்சி மேற்கொள்வது, நீச்சல் பயிற்சி, உள் விளையாட்டரங்கில் நடைபெறும் விளையாட்டுகள் உள்பட அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. மறு தேதி வரும் வரையில் இந்நடவடிக்கை அமலில் இருக்கும். எனவே, பொதுமக்கள் யாரும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக மைதானத்திற்கு வர வேண்டாம் என்றார்.

Tags : Cuddalore Playground ,
× RELATED இவ்வாறு அவர் கூறினார். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்