×

பாரி வேட்டையில் ஈடுபட்டால் சிறை வனத்துறை எச்சரிக்கை

பழநி, மார்ச் 17: பழநி வனச்சரகம் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு ஏராளமான அளவில் யானை, சிறுத்தை, வரிப்புலி, காட்டெருமை, காட்டுப்பன்றி, கேளையாடு, கரடி உள்ளிட்ட விலங்கினங்கள் உள்ளன. தவிர விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும் அதிகளவு உள்ளன. இதனால் பழநி வனச்சரகத்திற்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழாக்காலங்களில் சம்பிரதாயம் எனக்கூறி சிலர் பாரிவேட்டையில் ஈடுபடுவது வழக்கம். இதனைத் தடுக்க வனத்துறையினர் தற்போது தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பழநி வனச்சரகத்தில் ஆண்டிபட்டி, குதிரையாறு, ஜீரோ பாயிண்ட், தேக்கம்தோட்டம் பகுதிகளில் 7 நபர்கள் அடங்கிய வனப்பணியாளர்களைக் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் ரோந்துப்பணி மேற்கொண்டு வருகின்றனர். வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ம் ஆண்டு பிரிவு 39ன் படி வன உயிரினங்கள் அனைத்தும் அரசின் சொத்தாகும். வன உயிரினங்களை வேட்டையாடுதல், இறந்து கிடக்கின்ற வன உயிரினங்களை சேகரித்தல், சமைத்தல், பதப்படுத்துதல், விற்பனை செய்தல் மற்றும் பாதுகாத்தல் போன்றவை அனைத்தும் குற்றமாகும். இக்குற்றத்திற்கு வன உயிரின பாதுகாப்பு சட்டம் பிரிவு 51ன் படி 3 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 ஆயிரத்திற்கு குறையாமல் அபராதமும் விதிக்கப்படும். பாரிவேட்டை என்ற பெயரில் வனவிலங்குகளை வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே வனஉயிரினங்களை பாதுகாத்து, வனத்தை பெருக்கி வனத்துறையுடன் இணைந்து பொதுமக்கள் அனைவரும் செயல்பட முன்வர வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Prison Forest Department Warns Of Barry Hunting ,
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...